சென்னை:இந்தியாவில் முதன்முறையாக நடைபெறும் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயத்தை சென்னையில் இன்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பார்முலா 4 கார் பந்தயமானது தனி நபராகவும், இந்தியன் ரேசிங் லீக் அணியாகவும் நடத்தப்படுகிறது. இந்த பந்தயம் சென்னையின் மையப் பகுதியான தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தொலைவிற்கு நடத்தப்படுகிறது.
இந்நிலையில், ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கான சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பின் (FIA) அனுமதியை பெறுவதற்கு தாமதமானது. அதனால், இன்று நடக்கப்பட இருந்த ஃபார்முலா 4 தகுதிச்சுற்று 1 மற்றும் 2, இந்திய சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்று 2 போட்டிகள் நாளை மாற்றப்பட்டுள்ளது.
அதனால் இன்று இரவு 10.00 மணி வரை பயிற்சி மட்டும் தான் நடைபெற்றது. இந்த போட்டியும், பயிற்சியையும் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக கலந்துகொண்டனர். இதில் முதல் ஓட்டத்தில் சாலையின் தன்மையை அறிய, அதற்கு ஏற்றார் போல் ஃபார்முலா 4 காரை ஓட்டிச் சென்றனர். பின்னர் மெல்ல காரின் வேகத்தை கூட்டி பயிற்சி பெற்றனர். நாளை எந்த நேரத்தில் இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் ஃபார்முலா 4 பந்தயம் நடைபெறும் என்ற அட்டவணை வெளியாகியுள்ளது.
இந்த போட்டியின் முதல் சுற்று கடந்த ஆகஸ்ட் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் சென்னையை அடுத்து இருங்காட்டு கோட்டையில் நடைபெற்றது. நாளை நடைபெறும் பந்தயம் 2வது சுற்றுப் போட்டியாகும். 3வது சுற்றுப்போட்டி கோவையில் செப்டம்பர் 13 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 4வது மற்றும் 5வது சுற்றுகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கோவா மற்றும் கொல்கத்தாவில் நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.