ஐதராபாத்: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மகனுமான ரோகன் ஜெட்லி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிசிசிஐ செயலாளர் பதவிக்கான ரேசில் புதிதாக இணைந்து உள்ள ரோகன் ஜெட்லிக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக தற்போதைய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா முனைப்பு காட்டி வருகிறார். ஐசிசி வாரிய உறுப்பினர்களில் மொத்தம் 16 பேர் உள்ள நிலையில் அதில் 15 பேரின் ஆதரவு ஜெய்ஷாவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஜெய்ஷா ஐசிசியின் தலைவராவதில் பெரிய அளவில் சிக்கல்கள் இருக்காது எனக் கூறப்படுகிறது.
புதிய செயலாளர்:
அவருக்கு அடுத்து பிசிசிஐயின் செயலாளர் பொறுப்பை யார் கவனிப்பார்கள் என்ற கேள்வி பெரிதும் எழுந்துள்ளது. இதனிடையே பிசிசிஐ செயலாளர் பதவிக்கு 4 பேரிடையே கடும் போட்டி நிலவியதாக முதலில் தகவல் பரவியது. பிசிசிஐயின் துணை செயலாளர் மற்றும் காங்கிரஸ் எம்பி ராஜீவ் சுக்லா அந்த ரேசில் முதலிடத்தில் நீடித்து வந்தார்.
அதேநேரம் பிசிசிஐயின் பொருளாளரும், மும்பை கிரிக்கெட் சங்க உறுப்பினர்களில் முக்கியத்தக்க நபருமான அசிஷ் ஷெலர் செயலாளர் பதவிக்கு காய் நகரித்தி வருகிறார். இவர்களுக்கு மத்தியில் முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் தம்பி அருண் துமாலும் இந்த ரேசில் உள்ளார்.
ஐபிஎல் தலைவர்:
தற்போது ஐபிஎல் தலைவராக இருக்கும் அருண் துமாலுக்கும் பிசிசிஐ செயலாளர் பதவி கிடைக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. பணம் கொழிக்கும் ஐபிஎல் கிரிக்கெட்டின் தலைவர் மற்றும் பிசிசிஐயின் பொருளாளர் என ஒரே நேரத்தில் அருண் துமால் இரண்டு பதவிகளில் உள்ளார்.
இந்நிலையில், அருண் ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லி கடைசியாக இந்த பட்டியலில் இணைந்துள்ளார். அவருக்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகின்றன. மேலும் பிசிசிஐயின் தலைவர் ரோஜர் பின்னி ஆகியோரின் ஆதரவும் ரோகன் ஜெட்லிக்கு இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.
24 மணி நேரம் கெடு:
ஆகஸ்ட் 27ஆம் தேதியுடன் ஐசிசி தலைவர் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைகிறது. இன்னும் 24 மணி நேரமே உள்ள நிலையில், பிசிசிஐ செயலாளர், ஐசிசியின் தலைவர் என இரண்டில் ஒன்றை தேர்வு செய்யும் கட்டாயத்தில் ஜெய்ஷா உள்ளார். தற்போது ஐசிசியின் தலைவர் கிரேக் பார்க்கலேவின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், டிசம்பர் மாதம் புதிய ஐசிசி தலைவருக்கான தேர்தல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜெய்ஷா மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்யும் நிலையில் போட்டியின்றி அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். அதேநேரம் மேலும் ஒன்றிரண்டு வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் போது தேர்தல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:காதல் கிசுகிசுக்களில் சிக்கி வாழ்க்கையை இழந்த கிரிக்கெட் வீரர்கள்! யாரார் தெரியுமா? - Indian Cricketers Love affairs