லண்டன்:இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி, நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் பின்னர், முதல் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து 371 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து 2வது இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 136 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. இதனால், 114 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது, இங்கிலாந்து.
கடைசி போட்டி:வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன். அந்தவகையில், தன்னுடைய கடைசி போட்டியில் களம் இறங்கிய ஆண்டர்சனை இரு அணி வீரர்களும் மரியாதையுடன் வரவேற்றனர்.
இதனை ஏற்றுக்கொண்டு மைதானத்திற்கு நுழைந்த ஆண்டர்சன், முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டும், 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆண்டர்சன், அதன் பிறகு தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளார்.
வரலாற்று சாதனைகள்: 41 வயதாகும் ஆண்டர்சன் இங்கிலாந்து அணிக்கு பல்வேறு நேரங்களில் பக்கபலமாக செயல்பட்டு, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி உள்ளார். மேலும் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தியுள்ளார். அதில், சிலவற்றை இங்கு பார்ப்போம்.
188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், மொத்தம் 704 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகின் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்தார், ஆண்டர்சன். இதற்கு முன், முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்னே ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களே 700 விக்கெட்களை எடுத்திருந்தனர்.
அதிக டெஸ்ட் போட்டிகளை விளையாடிய வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்திலும் ஆண்டர்சன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட் அதிக முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் இவர் 6வது இடத்தில் உள்ளார்.
சச்சின் வாழ்த்து:ஆண்டர்சன் ஓய்வு பெறுவதை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, "ஹே ஜிம்மி..22 ஆண்டுகளாக தொடர்ந்த உங்களின் ஸ்பெல் மூலமாக ரசிகர்களின் மனங்களை தொடர்ந்து வீழ்த்தியிருக்கிறது.
நீங்கள் பவுலிங் செய்வதை பார்ப்பதே மகிழ்ச்சியை அளிக்கும். அந்த ஆக்ஷன், வேகம், ஸ்விங், ஃபிட்னஸ், துல்லியம் ஆகியவற்றின் மூலமாக வருங்கால சந்ததியினருக்கு ஊக்கமாக இருக்கிறீர்கள். நல்ல உடல்நலத்துடன் இரண்டாவது இன்னிங்ஸ் அமைய வாழ்த்துகிறேன். வாழ்வின் மிக முக்கிய ஸ்பெல்லுக்காக ஷூக்களை தயார் செய்து கொள்ளுங்கள். இம்முறை குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதற்காக" என்று தெரிவித்துள்ளார்.
பிரியாவிடை:21 வயதில் இங்கிலாந்து அணிக்காக தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய ஆண்டர்சன் 22 ஆண்டுகள் நிற்காமல் பயணித்துள்ளார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியை தொடங்கிய ஜேம்ஸ் ஆண்டர்சன் பயணம், தற்போது அதே மைதானத்தில் நிறைவு பெற்றுள்ளது.
இதையும் படிங்க:இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி... கம்பீருக்கு காத்திருக்கும் சவால்!