ஐதராபாத்: நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெங்களூரு மற்றும் புனேவில் நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முறையே நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 1ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது.
சொந்த மண்ணில் அசைக்க முடியாக அணியாக விளங்கிய இந்தியா தொடரை இழந்தது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இழக்க இந்தியாவின் பேட்டிங்கே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதிலும் முக்கியமாக சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது ஏமாற்றமாக அமைந்தது.
இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாததே விராட் கோலியின் இந்த தடுமாற்றத்திற்கு காரணம் என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். மேலும், விராட் கோலி உள்நாட்டு கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, "விராட் கோலிக்கு இந்த தொடர் எளிதாக இல்லை. ஸ்பின்னர்கள் அவரைத் தடுமாற வைக்கிறார்கள்.
எனவே அதற்கான காரணத்தை விராட் கோலி கண்டறிந்து மீண்டும் வலுவாக திரும்ப என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டுமென நினைக்கிறேன். தற்போது அவர் விடைகளை தேடும் மனிதராக இருக்கிறார். நீங்கள் ஜீனியஸ் போன்ற உச்சத்தை தொட்டு நட்சத்திர அந்தஸ்தை பெறும் போது உங்கள் மீது, சவால் மேல் சவால்கள் வீசப்படும்.
சுழலுக்கு சாதகமான பிட்ச்களில் இந்தியா சுழலை நன்றாக எதிர்கொள்ள விரும்புவார்கள். அதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? என்பதே கேள்வி. விராட் கோலி எந்தளவுக்கு திறன்மிக்கவர் என்பது நமக்குத் தெரியும். ஆனால் ரசிகர்கள் சொல்வது போல அவர் நீண்ட காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று சொல்வதை நாம் மறுக்க முடியாது. அதை மூடி மறைக்கவில்லை. கடந்த 2–3 வருடங்களாக சுழலுக்கு எதிராக விராட் கோலியின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை.
அதற்கு உள்ளூர் கிரிக்கெட்டுக்கு மீண்டும் விளையாடச் சென்று தற்போதைய டிஆர்எஸ் விதிமுறைகளை தாண்டி எப்படி அசத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக விராட் கோலிக்கு இடது கை ஸ்பின்னர்கள் பெரிய அச்சுறுத்தலை கொடுக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை" என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.
இதையும் படிங்க:மெகா ஏலத்தில் ரிஸ்க் எடுக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்? இதோ முழு தக்கவைப்பு வீரர்கள் விபரம்!