சென்னை:டிஎன்பிஎல் என்று அழைக்கப்படக்கூடிய தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஹாட்ரிக் பட்டத்தை எதிர்நோக்கி லைகா கோவை கிங்ஸ் அணியும், முதல் பட்டத்தைக் குறிவைத்து திண்டுக்கல் டிராகன்ஸ் களமிறங்கியது.
இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய கோவை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. அந்த அணி பவர்ப்ளேவில் அதிரடியாக விளையாடி 50 ரன்கள் எடுத்தாலும் 3 முக்கிய விக்கெட்களையும் இழந்தது.
குறிப்பாக முதல் குவாலிஃபையரில் 1 சதமடித்து ஆட்டநாயகனாக ஜொலித்த சாய் சுதர்சன் 14 ரன்களில், விக்னேஷ் சுழலில் விக்கெட் இழந்து வெளியேறினார். ஒரு பக்கம் விரைவாக ரன் சேர்க்க முயற்சித்தாலும், கோவை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர்.
கோவை அணியின் நட்சத்திர வீரர் கேப்டன் ஷாருக்கான் (3) திண்டுக்கல்லின் வியூகத்தில் சிக்கி முக்கியத் தருணத்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும் மிடில் ஆர்டர் மேட்ஸ்மேன்கள் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக விளையாடினர். ராம் அர்விந்த் (27) மற்றும் அத்திக் உர் ரஹ்மான்(25) ரண்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் ரன் பெரிதாக சோபிக்கவில்லை.
திண்டுக்கல் அணி சிறப்பான ஃபீல்டிங் மூலம் பல ரன்களை டிபைன் செய்ததோடு அற்புதமான கேட்ச்சுகளை பிடித்து அசத்தினர். அதிலும் சரத் குமார் 4 கேட்ச்சுகளை பிடித்து அசத்தினார். இதன் மூலம் டிஎன்பிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் ஃபீல்டராக அதிக கேட்ச்சுகளை எடுத்த 3வது வீரர் என்ற சாதனையைப்படைத்தார்.