ஹைதராபாத்:இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) புதிய செயலாளராக தேவஜித் சைகியா, பொருளாளராக பிரப்தேஜ் சிங் பாட்டியாவும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ள வாரியத்தின் சிறப்பு பொதுக்கூட்டத்தில் இருவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் தெரிகிறது.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் தேவஜித் சைகியா. சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்க பிரதிநிதி பிரப்தேஜ் சிங் பாட்டியா. இருவரும் முறையே, பிசிசிஐ-யின் முக்கிய பொறுப்புகளான செயலாளர், பொருளாளர் பதவிக்கு விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.12) நடைபெறவுள்ள பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக் கூட்டத்தில் இருவரின் பதவி நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிசிசிஐ செயலாளராக பதவி வகித்துவந்த ஜெய் ஷா, வாரியத்தின் தலைவர் ஆனதையடுத்து செயலாளர் பதவிக்கு சைகியா தேர்வாக உள்ளார். பிசிசிஐ பொருளாளராக பொறுப்பு வகித்துவந்த ஆஷிஷ் செல்லர் இடத்துக்கு பாட்டியா நியமிக்கப்பட உள்ளார்.