ராணிப்பேட்டை: கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் முன்பாகல் பகுதி சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு சாமி தரிசன செய்ய 4 கர்நாடகா மாநில அரசு பேருந்துகளில் வந்து கொண்டிருந்தனர். கோயிலில் சாமி தரிசனம் செய்து வீடு திரும்பும் போது ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வழி சென்றுக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பேருந்துக்கு முன் டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த டிப்பர் லாரிக்கு எதிரே ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி ஈச்சர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென மூன்று வாகனங்களும் ஒன்றோடு ஒன்றோடு மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த கோர விபத்தில் 4 நபர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், பேருந்தில் பயணித்த 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த சிப்காட் போலீசார், ராணிப்பேட்டை, சிப்காட் தீயணைப்புத் துறையினர் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் ஆகியோர் இணைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் காயம் அடைந்தவர்களை மீட்டு வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
இதையும் படிங்க: தூங்கிய டிரைவர்.. நெல்லையில் தலைகீழாக கவிழ்ந்த ஆம்னி பேருந்து... 35 பேர் படுகாயம், ஒருவர் பலி!
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த சிப்காட் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தர் சுக்லா விபத்து குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
முதற்கட்ட விசாரணையில் டிப்பர் லாரி பின் வந்து கொண்டிருந்த கர்நாடக அரசு பேருந்து முந்தி செல்ல முயன்றதால் எதிரே காய்கறி ஏற்றி ஈச்சர் லாரி மீது மோதி விபத்து நடைபெற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மேலும் விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சாமி தரிசனம் செய்து வீடு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.