டெல்லி : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.27) மாலை 3.30 மணிக்கு தொடங்கிய 43வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜேல் ப்ரேசர் 84 ரன்கள் விளாசினார். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய ஜேக் பரேசர் 6 சிக்சர் 11 பவுண்டரி விளாசி அணியின் ஸ்கோர் கணக்கை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினார்.
அவரைத் தொடர்ந்து சாய் ஹோப் 41 ரன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 48 ரன்கள் என சீரான இடைவெளியில் அணிக்கு நல்ல பஙகளிப்பை அளித்தனர். இதனால் டெல்லி அணி எளிதில் 257 ரன்கள் குவித்தது. இதையடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது.
மும்பை அணிக்கு தொடக்கம் சாதகமாக அமையவில்லை. ரோகித் சர்மா 8 ரன்கள் மட்டும் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷன் தன் பங்குக்கு 20 ரன்கள் சேர்த்து நடையை கட்டினார். மும்பை அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் இந்த முறை 26 ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றம் அளித்தார். இதனிடையே திலக் வர்மா - கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இணை சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டது. ஓர் அளவுக்கு தாக்குப்பிடித்த ஹர்திக் பாண்டியா 46 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
மறுபுறம் திலக் வர்மா தனி ஆளாக அணியை காப்பாற்ற போராடிக் கொண்டு இருந்தார். அவருக்கு டிம் டேவிட் (37 ரன்) நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். இதனிடையே சிக்சருக்கு ஆசைப்பட்டு திலக் வர்மா பந்தை விளாச அது கேட்ச்சாகி போனது. இறுதிக்கட்டத்தில் பியூஷ் சாவ்லா சற்று அதிரடியாக விளையாடி அணியின் தோல்வி வித்தியாசத்தை குறைத்தார்.
அபாரமாக விளையாடிய பியூஷ் சாவ்லா கடைசி பந்தில் சிக்சருக்கு பறக்கவிட்டு ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. லுக் வுட் 9 ரன்களுடன் களத்தில் நின்றார். டெல்லி அணியில் முகேஷ் குமார் ரஷிக் தர் சலாம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கலீல் அகமது 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையும் படிங்க:டாஸ் வென்று ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு! லக்னோவின் வெற்றி வேட்கை தொடருமா? - IPL2024 RR Vs LSG Match Highlights