சென்னை:அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 5வது தொடர் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய போட்டியில் நடப்பு சாம்பியனான கோவா சேலஞ்சர்ஸ் அணி - டெல்லி தபாங் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற முடிந்த இந்த போட்டி குறித்து விரிவாகப் பார்ப்போம்.
தபாங் டெல்லி ஆதிக்கம்:
- இதில் முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், டெல்லியின் கேப்டன் சத்தியன் ஞானசேகரன், கோவாவின் மிஹாய் போபோசிகாவை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் செட்டை சத்தியன் 8-11 என்ற கணக்கில் இழந்தார். ஆனால் அடுத்த இரு செட்களையும் ஆக்ரோஷமாக விளையாடி 11-9, 11-9 என கைப்பற்றினார். இது டெல்லி அணிக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது.
- இதனைத் தொடர்ந்து மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஒரவன் பரனாங் -யாங்சிலியுடன் மோதினார். இதில் முதல் மற்றும் இரண்டாவது செட்டை 11-7, 11-7 முறையே கைப்பற்றினார் பரனாங். கடைசி செட்டை யாங்சிலியு 11-6 என கைப்பற்றினாலும் ஆட்டத்தின் முடிவில் ஒரவன் பரனாங் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
- தொடர்ந்து 3-வதாக நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் சத்தியன் ஞானசேகரன் மற்றும் ஒரவன் பரனாங் ஜோடி கோவாவின் ஹர்மீத் தேசாய் மற்றும் யாங்சி ஜோடியை எதிர் கொண்டது. இதில் சத்தியன் ஞானசேகரன் - ஒரவன் பரனாங் 11-7, 11-4 என்ற முறையில் வெற்றி பெற்றனர்.
- 4-வதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஆண்ட்ரியாஸ் லெவென்கோவும் - ஹர்மீத் தேசாயும் விளையாடினார். இதில் முதல் செட்டை ஆண்ட்ரியாஸ் லெவென்கோ 11-7 என கைப்பற்றினார். 2-வது செட்டை ஹர்மீத் தேசாய் 11-8 கைப்பற்றினர். இதனால் 1-1 என்ற சமநிலையிலிருந்தது. இதனையடுத்து நடைபெற்ற 3-வது செட்டை ஹர்மீத் தேசாய் 11-9 கைப்பற்றி அசத்தினார்.
- கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தியா சித்தலே- யஷஸ்வினி கோர்படேவுடன் மோதினார். இதில் முதல் செட்டை தியா சித்தலே 11-10 என கைப்பற்றினார். 2-வது செட்டில் தொடக்கத்திலேயே ஆதிக்கம் செலுத்திய தியா சித்தலே 11-6 என தன்வசப்படுத்தினார். கடைசி செட்டை 0-11 என்ற கணக்கில் பறிகொடுத்தாலும், முடிவில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார் தியா சித்தலே.