சென்னை: ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் (IPL Playoffs) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் (RCB VS RR) மோதிய நிலையில், அதில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிபையர் 2க்கு முன்னேறி உள்ளது.
இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்து பெங்களூரு அணியை முதலில் பேட்டிங் செய்ய வைத்தது. பவர்பிளேவில் இருந்து டெத் ஓவர்கள் வரை பெங்களூரு அணியை எங்கேயுமே தலைதூக்க விடவில்லை ராஜஸ்தான் பந்து வீச்சாளர்கள். இதன் காரணமாக, 20 ஓவர்களில் வெறும் 172 ரன்களை மட்டுமே பெங்களூரு அணியால் எடுக்க முடிந்தது.
அதிகபட்சமாக ராஜத் பட்டிதார் 34, கோலி 33, மஹிபால் லோமரோர் 32 ரன்களும் எடுத்தனர். அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 174 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 42, ரியான் பராக் 36 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் பெங்களூரு அணி தொடரை விட்டு வெளியேற, ராஜஸ்தான் அணி குவாலிபையர் 2க்கு முன்னேறியது.
இந்த நிலையில், பெங்களூரு அணி தோல்வி அடைந்ததை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் (Instagram), எக்ஸ் (Twitter), பேஸ்புக் (Facebook) என எங்கு சென்றாலும், சென்னை ரசிகர்களின் மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் தான் அதிகம் இடம் பிடித்திருக்கின்றன.
முன்னதாக, பிளே ஆஃப் சுற்றை தீர்மானிக்கும் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் (CSK VS RCB) மோதின. அதில் பெங்களூரு அணி வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அப்போது பெங்களூரு அணி ரசிகர்கள், சென்னை அணியின் ரசிகர்களை கிண்டல் அடித்தனர்.
அதற்கு பழி தீர்க்கும் வகையில், பெங்களூரு அணியின் தோல்விக்காக காத்திருந்த சென்னை ரசிகர்கள் தற்போது படையெடுத்துள்ளனர். ராஜஸ்தான் - பெங்களூரு போட்டியின் போது கூட அகமதாபாத் மைதானத்தில் சில சென்னை ரசிகர்களை பார்க்க முடிந்தது. இந்நிலையில், சென்னை ரசிகர்கள் பெங்களூரு அணியை கலாய்த்து பதிவிட்ட மீம்ஸ்களை தற்போது பார்க்கலாம்.