திருச்சி: பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதே எனது ஆசை என்றும் நான் இதுவரையில் மகேந்திர சிங் தோனியின் தலைமையில் விளையாடியது இல்லை என்று கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் இன்று (ஜனவரி 10) வெள்ளிக்கிழமை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில், எதிர்கால சந்ததியினருக்கு விளையாட்டுத் துறையில் என்ன அறிவுரை வழங்குவீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “விளையாட்டு மட்டுமல்லாமல் எந்த துறையாக இருந்தாலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையினை முழு ஈடுபாட்டுடன் விருப்பத்துடன் செய்ய வேண்டும். தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்” என்றார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து கிரிக்கெட் வீரர் நடராஜன் பேசியதாவது, விளையாட்டுத் துறையில் கிராமப்புறங்களில் மிக்கியத்துவம் கிடைக்கவில்லை என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கு தற்போது அதிகளவில் வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், அவர்கள் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில்லை. கடினமாக உழைத்தால் மட்டுமே நாம் தேர்ந்தெடுக்கும் துறையில் முன்னேற முடியும்” என்றார்.
CSK அணியில் விளையாட வாய்ப்பு?
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் பிறந்த அனைவரும் சி.எஸ்.கே (CSK) அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கண்டிப்பாக நானும் அதை நினைக்கிறேன். அதற்கு கடினமாக உழைக்க வேண்டும். நான் நிறைய கேப்டன்களின் தலைமையில் விளையாடி உள்ளேன். குறிப்பாக, கேப்டன்கள் விராட் கோலி மற்றும் வில்லியம்சன் தலைமையில் விளையாடியுள்ளேன். இவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இதுவரையில் விளையாடியது இல்லை” என்றார்.