ஐதராபாத்: ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் (Andrew Holness) அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஜாம்பவான் கிறிஸ் கெயில் இந்தியா விரைந்துள்ளார். இந்நிலையில், கிறிஸ் கெயில் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் பிரதமர் மோடி மற்றும் ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் ஆகியோருடன் ஒன்றாக கிறிஸ் கெயில் இருக்கிறார். மேலும் OneLove என்ற ஹெஷ்டேக்கில் வீடியோவை கிறிஸ் கெயில் பகிர்ந்துள்ளார். வீடியோவில் பிரதமர் மோடியிடம் நமஸ்தே என்று கூறி அறிமுகமாகும் கிறிஸ் கெயில் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொள்கிறார்.
ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் 4 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று வந்து உள்ள ஆண்ட்ரூ ஹோல்னஸ், இந்தியா - ஜமைக்கா இடையே நல்லுறவை பேணும் வகையில் முதல் முறயாக இரு தரப்பு பேச்சுவார்த்தையில் இரு நாட்டு தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர்.
ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னசுடன் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயிலும் இந்தியா வந்த நிலையில், பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடினார். இதுகுறித்து ஜமைக்கா பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில், "கிறிஸ் கெயில் ஜமைக்காவின் பிரதிநிதியாக மட்டுமல்லாமல், தனது கிரிக்கெட் திறமைக்காக இந்தியாவில் பரவலாக அறியப்படுகிறார். அனைவராலும் மதிக்கப்படுகிறார் மற்றும் போற்றப்படுகிறார்.
எங்களது இந்திய பயணத்தின் போது கிறிஸ் கெயிலும் எங்களுடன் இனைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய பாரம்பரியத்தின் ஜமைக்கா தொழிலதிபர்களும் இணைந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 103 டெஸ்ட், 301 ஒருநாள் கிரிக்கெட், மற்றும் 79 டி20 கிரிக்கெட் போட்டிகளில் கிறிஸ் கெயில் விளையாடி உள்ளார்.
இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 ஆயிரத்து 214 ரன்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரத்து 480 ரன்களும், டி20 போட்டிகளில் ஆயிரத்து 899 ரன்களும் கிறிஸ் கெயில் குவித்துள்ளார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முறை இரட்டை சதம் விளாசிய நான்கு வீரர்களில் கிறிஸ் கெயிலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அஸ்வினை பின்னுக்குத் தள்ளிய பும்ரா! அதிர்ச்சி அளிக்கும் புது தரவரிசை பட்டியல்! - ICC Rankings