நாக்பூர்: இந்திய அணியின் நட்சத்திர வீரர் சேதேஷ்வர் புஜாரா ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பை நடைபெற்று வரும் நிலையில், இன்று (ஜன.21) செளராஷ்டிரா மற்றும் விதர்பா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது சேதேஷ்வர் புஜாரா இந்த சாதனையை படைத்துள்ளார்.
விதர்பா - செளராஷ்டிரா அணிகளுக்கு இடையே நேற்று முன் தினம் (ஜன.19) தொடங்கிய போட்டி இன்று (ஜன.21) நிறைவடைந்தது. இந்த போட்டியில் செளராஷ்டிரா அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் சேதேஷ்வர் புஜாரா முதல் இன்னிங்ஸில் 43 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 66 ரன்களும் எடுத்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில் 66 ரன்கள் எடுத்ததன் மூலம் சேதேஷ்வர் புஜாரா ரஞ்சிக் கோப்பையில் 20,000 ரன்கள் எட்டினார். இதன் மூலம் அவர் முதல் தர கிரிக்கெட்டில் 20,000 ரன்களை எட்டிய 4வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் 20 ஆயிரம் ரன்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.