சென்னை:17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மே.12) மாலை 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 61வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை - ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கல் சேர்த்தது. அதிகபட்சமாக ரியான் பராக் 47 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
சென்னை அணியின் நேர்த்தியான பந்துவீச்சில் ரன் குவிக்க முடியாமல் ராஜஸ்தான் வீரர்கள் திணறினர். சென்னை அணியை பொறுத்தவரை சிமர்ஜித் சிங் 3 விக்கெட்டும், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியது.
சென்னை அணியின் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திர இந்த முறையும் தன் பங்குக்கு 27 ரன்கள் மட்டும் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுபுறம் மற்றொரு தொடக்க வீரரான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நிலைத்து நின்று விளையாட சீரான இடைவெளியில் சென்னை அணியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன.