சென்னை:அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 5வது தொடர், சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் புனேரி பால்டன் அணி, முன்னாள் சாம்பியன் சென்னை லயன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.
இதில் சென்னை லயன்ஸ் அணி 12-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 37 புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை நெருங்கியுள்ளது.
முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், புனேரி பால்டன் அணியின் அங்கூர் பட்டாசார்ஜி, சென்னை லயன்ஸ் அணியின் கேப்டன் சரத் கமலுடன் மோதினார். இதில் சரத் கமல் 3-0 (11-7, 11-6, 11-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சிறந்த தொடக்கம் அமைத்துக் கொடுத்தார்.
2வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் அய்ஹிகா முகர்ஜி - பொய்மண்டி பைஸ்யாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் அய்ஹிகா முகர்ஜி 0-3 (10-11, 9-11, 10-11) என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
3வதாக நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் அனிர்பன் கோஷ், நடாலியா பஜோர் ஜோடியானது சரத் கமல், சகுரா மோரி ஜோடியை எதிர்கொண்டது. இதில் சரத் கமல், சகுரா மோரி ஜோடி 3-0 (11-3, 11-8, 11-8) என்ற செட் கணக்கில் வெற்றி கண்டது.
4-வது நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஜோவா மான்டீரோ- ஜூல்ஸ் ரோலண்டுடன் மோதினார். இதில் ஜோவா மான்டீரோ 1-2 (7-11, 11-2, 3-11) என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.
கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் நடாலியா பஜோர், சென்னை லயன்ஸ் அணியின் சகுரா மோரியுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் நடாலியா பஜோர் 2-1 (11-10, 8-11, 11-3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். முடிவில், சென்னை லயன்ஸ் அணி 12-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. நடப்பு சீசனில் அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையைப் பெற்றது சென்னை லயன்ஸ்.
போட்டிகளைக் காண்பது எப்படி?இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் (டி.டி.எஃப்.ஐ) ஆதரவுடன் தொழில் முறை போட்டியான அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரை நீரஜ் பஜாஜ் மற்றும் விட்டா டானி ஆகியோர் நடத்தி வருகின்றனர்.
இந்த பரபரப்பான போட்டிகள் அனைத்தும் ஸ்போர்ட்ஸ் 18 கேல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.
மேலும், JioCinema (இந்தியா) மற்றும் Facebook லைவ் (இந்தியாவிற்கு வெளியே) ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. புக் மை ஷோவில் ஆன்லைனில் டிக்கெட்டுகள் கிடைக்கும். மேலும் போட்டி நடைபெறும் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கின் கேட் எண் 1-ல் அருகிலுள்ள பாக்ஸ் ஆபிஸில் ஆஃப்லைனிலும் கிடைக்கும்.
இதையும் படிங்க:வெள்ளி வென்ற அடுத்த கணமே வந்த கால்.. கால்நடை மருத்துவரின் பாராலிம்பிக்ஸ் கனவு சாத்தியமானது எப்படி?