ஐதராபாத்:கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலன்கா, உள்ளூர் வீராங்கனை வலியன்ட் ஜெசிக்காவை எதிர்கொண்டார்.
வெற்றிக்காக இருவர்ம் கடுமையாக போராடினர். ஏறத்தாழ 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அரினா சபலன்கா 7-க்கு 5, 7-க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை உச்சி முகர்ந்தார். உலக மகளிர் டென்னிஸ் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அரினா சபலன்கா, நடப்பாண்டில் இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.
தொடர்ந்து 2வது கிராண்ட்ஸ்லாம்:
முன்னதாக ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரையும் அரினா சபலன்கா கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அரினா சபலன்கா இதுவரை மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி உள்ளார்.
அதேபோல் 26 வயதான அரினா சபலன்கா 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரே ஆண்டில் இரண்டு பிரதான தொடர்களை கைப்பற்றிய முதல் வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார். இதற்கு முன் 2016ஆம் ஆண்டு ஏஞ்சலிக்யு கெர்பர் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.