தர்மசாலா :இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட 5 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி ஐதராபாத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து விசாகபட்டினத்தில் கடந்த 2ஆம் தேதி தொடங்கிய 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்திலும், பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற்ற 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்திலும், பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் தொடங்கிய 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 7ஆம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்து உள்ளது. தசைப்பிடிப்பு காயம் காரணமாக 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகிய நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் முழுமையாக குணமடையாததால் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
வலைப் பயிற்சியில் கே.எல்.ராகுல் ஈடுபட்ட போது, மீண்டும் தசைப் பகுதியில் வலி ஏற்பட்ட நிலையில், அவர் லண்டன் சென்று சிகிச்சை பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரைஇறுதி போட்டியில் விளையாடுவதற்காக வாஷிங்டன் சுந்தர் அணியில் இருந்து விலக்கப்பட்டு உள்ளார்.