செயின்ட் வின்சென்ட்:9வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஜூன் 2ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் செயின்ட் வின்சென்டில் உள்ள அர்னஸ் வேல் மைதானத்தில் நடைபெற்ற 27வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வங்கதேசம் அணியின் இன்னிங்சை தொடக்க வீரர்கள் தன்ஷித் ஹசன் மற்றும் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ ஆகியோர் தொடங்கினர். ஆரம்பமே முதலே வங்கதேசத்திற்கு கடும் நெருக்கடி கொடுத்தனர் நெதர்லாந்து வீரர்கள்.
இதனால் கேப்டன் ஷான்டோ 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய லிட்டன் தாஸ் (1 ரன்) நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இதனிடையே கூட்டணி அமைத்த ஷகிப் அல் ஹசன் மற்றும் மற்றொரு தொடக்க வீரர் தன்ஷித் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
சிறப்பாக விளையாடிய இந்த கூட்டணி ஏதுவான பந்துகளை சிக்சர் மற்றும் பவுண்டரிக்கு திருப்பி விட்டு துரித ரன் சேகரிப்பில் ஈடுபட்டது. தன்ஷித் தன் பங்குக்கு 35 ரன்கள் அடித்து கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் மஹ்மத்துல்லா 25 ரன்கள் அடித்துக் கொடுத்தார். இதனால் 20 ஒவர்களில் வங்கதேசம் அணி 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணியில் தொடக்க வீரர்கள் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்த போதிலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன. தொடக்க வீரர்கள் மைக்கெல் லெவிட் 18 ரன், மேக்ஸ் 12 ரன், விக்ரம்ஜித் 26 ரன், சைபிரன்ட் 33 ரன் என தங்கள் பங்குக்கு ரன்கள் அடித்து கொடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒரு கட்டத்தில் வங்கதேசத்திற்கு சவால் அளிக்கும் வகையில் இருந்த நெதர்லாந்து அணியின் பேட்டிங், கடைசியில் புஸ்வானம் போல் மாறியது. ஆட்டம் மெல்ல வங்கதேசம் பக்கம் திரும்பியது. 20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தன. இதனால் வங்கதேசம் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வங்கதேசம் அணியில் அதிகபட்சமாக ரிஷத் ஹூசைன் 3 விக்கெட்டுகளும், தஸ்கின் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அதைத் தொடர்ந்து ஆன்டிகுவாவில் நடைபெற்ற 28வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஓமன் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஓமன் அணி 13 புள்ளி 2 ஓவர்களில் 47 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஷோகைப் கான் (11 ரன்) மட்டும் இரட்டை இலக்கில் ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 3.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர் பிலிப் சால்ட் 12 ரன்களும், கேப்டன் ஜோஸ் பட்லர் 24 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.
இதையும் படிங்க:சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற இந்தியா.. அமெரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி! - T20 World Cup