கான்பூர்: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் வங்கதேசம் அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வங்கதேசம் - இந்தியா அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (செப்.27) தொடங்கியது. முதல் நாளில் வங்கதேசம் அணி 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்த நிலையில், போதிய வெளிச்சமின்மை மற்றும் மழை காரணமாக பாதியிலேயே போட்டி கைவிடப்பட்டது.
மழையால் பாதிப்பு:
கான்பூரில் தொடர்ந்து கனமழை கொட்டி வந்ததால் இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்நிலையில், இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. இரண்டு நாட்கள் தொடர் மழைக்கு பின், இன்று கான்பூரில் வானிலை நன்றாக இருந்தது.
காலை முதலே வெயில் அடித்ததால் மைதானத்தில் உள்ள ஈரப்பதம் காய்ந்து விளையாடுவதற்கு ஏதுவாக இருந்தது. இதையடுத்து வங்கதேசம் அணி தொடர்ந்து தனது முதல் இன்னிங்சில் விளையாடியது. மொமினுல் ஹக் நிலைத்து நின்று விளையாட மறுபுறம் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டத் தொடங்கினர்.
வங்கதேசத்தை உருக்குலைத்த இந்திய வேகப்பந்துவீச்சு:
ஆடுகளத்தில் பந்து நன்றாக ஸ்விங் ஆனதால் வழக்கத்தை வேகபந்துவீச்சுக்கு மைதானம் நன்கு ஒத்துழைத்தது. இந்திய வீரர்கள் பும்ரா மற்றும் முகமது சிராஜ் நேர்த்தியான பந்துகளை வீசி வங்கதேச அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். முஸ்பிகுர் ரஹூம் (11 ரன்), விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் (13 ரன்), மெஹிதி ஹசன் மிராஸ் (20 ரன்), தஜுல் இஸ்லாம் (5 ரன்), ஹசன் மக்முத் (1 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து பும்ரா மற்றும் முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து நடையை கட்டினர்.
மறுபுறம் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். அடுத்தடுத்து வங்கதேச வீரர்கள் அவுட்டானாலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மொமினுள் ஹக் (107 ரன்) மட்டும் நிலைத்து நின்று விளையாடி சதம் அடித்தார். இறுதியில், 74.2 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஜடேஜா புது சாதனை:
இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 3 விக்கெட்டுகளும், முகமது சிராஜ், அஸ்வின், ஆகாஷ் தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். அதேநேரம் 1 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை கடந்து ரவீந்திர ஜடேஜா புது சாதனை படைத்தார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 7வது இந்தியர் என்ற சிறப்பை ஜடேஜா பெற்றார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் தொடர்ந்து விளையாடி வருகிறது.
இதையும் படிங்க:ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுக்கு விருந்து வைத்த நீடா அம்பானி! அண்டிலியா வீட்டில் ஒரு விசிட்! - Olympic Athletes Nita Ambani house