ஆன்டிக்வா: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங் தேர்வு செய்தது. வங்கதேச அணிக்கு ஸ்டார்க் முதல் ஓவரிலேயே அதிர்ச்சி அளித்தார். அவரது பந்தில் தொடக்க ஆட்டக்காரர் தன்சித் ஹசன் ரன் எடுக்காமல் போல்டானார். இதனைதொடர்ந்து வங்கதேச கேப்டன் ஷண்டோவுடன், லிட்டன் தாஸ் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் ஓரளவு ஆஸ்திரேலியா பவுலர்களை சமாளித்து ரன்கள் சேர்க்க தொடங்கிய நிலையில், லிட்டன் தாஸ் சாம்பா பந்தில் ஸ்வீப் ஆட முயன்று 16 ரன்களுக்கு போல்டானார். அடுத்து வந்த ரிஷப் 2 ரன்களுக்கு அவுட்டானார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஷண்டோவும் 41 ரன்களுக்கு அவுட்டாக, வங்கதேச அணி பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. அடுத்து களமிறங்கிய அனுபவம் வாய்ந்த ஷகிப் அல் ஹசன் 8 ரன்களுக்கு ஸ்டொய்னிஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இதனைதொடர்ந்து வங்கதேச அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் மேமுதுல்லா, கம்மின்ஸ் பந்தில் 2 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்த பந்திலேயே மெகதி ஹசனை அவுட்டாக்கிய கம்மின்ஸ், ஹாட்ரிக் விக்கெட் எடுக்கும் வாய்ப்பை பெற்றார். இன்னிங்ஸின் கடைசி ஓவரை வீசிய கம்மின்ஸ், ஹிருதாய் என்பவரை 40 ரன்களுக்கு அவுட்டாக்கினார். இதன் மூலம் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றும் 2வது ஆஸ்திரேலியா பவுலர் என்ற சாதனை படைத்தார்.