ஐதராபாத்: வங்கதேசம் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 21ஆம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 30ஆம் தேதி கராச்சியில் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
இதில் கராச்சியில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் - வங்கதேசம் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முழுக்க முழுக்க மூடிய மைதாத்தில் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.
அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில், கராச்சி மைதானத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் பார்வையாளர்களுக்கு அந்த டெஸ்ட் போட்டியில் அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதனால் ரசிகர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், குறிப்பிட்ட போட்டிக்கு டிக்கெட் விற்பனை நடத்தப்படக் கூடாது என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது. அதேநேரம், அந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை முன்கூட்டியே வாங்கியவர்களின் வங்கிக் கணக்கில் முழுத் தொகையும் திருப்பிச் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கரோனா காலத்திற்கு பின்னர் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை தயாரிப்பு பணிகளை தயாரித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதற்கான அனுமதி பெற அட்டவணையை ஐசிசிக்கு அனுப்பி உள்ளது. அதேநேரம் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையில் இந்தியா கலந்து கொள்ளுமா என்ற சந்தேகம் தொடர்ந்து நிலவுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:துலிப் கோப்பை கிரிக்கெட்: விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா இல்லாத அணி அறிவிப்பு! என்ன காரண்ம்! - Duleep Trophy Squad