விழுப்புரம்: விக்கிரவாண்டியில் எல்.கே.ஜி குழந்தை பள்ளி கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தன் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தந்தை காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்து, வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
விக்கிரவாண்டியில் வசித்து வருபவர்கள் பழனிவேல் - சிவசங்கரி தம்பதி. இவர்களுடைய மகள் லியாலட்சுமி (3 1/2 வயது). இவர் அங்குள்ள செண்ட் மேரீஸ், உயர்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி.படித்து வந்தார். இந்நிலையில், ஜனவரி 3ஆம் தேதி ஆசிரியையிடம் கூறி விட்டு லியாலட்சுமி வகுப்பறையில் இருந்து சிறுநீர் கழிப்பதற்காக சென்றபோது கழிவுநீர்த் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
இது குறித்து குழந்தையின் பெற்றோர், குழந்தை மரணத்தில் சந்தேகம் உள்ளதாகப் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பள்ளி தாளாளர் எமல்டா, முதல்வர் டோமினிக் மேரி, ஆசிரியை ஏஞ்சல் ஆகிய மூவரையும் நள்ளிரவில் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக தாளாளர், முதல்வர் இருவருக்கு மட்டும் விழுப்புரம் அரசு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர்களின் ஆசிரியை மட்டும் கடலூர் மத்திய சிறையிலும், தாளாளர் மற்றும் முதல்வர் ஆகிய இருவரும் நீதிமன்ற காவலில் மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர். இதற்கிடையே தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் மூவரும் மனு அளித்திருந்தனர். இது தொடர்பான மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில், வியாழக்கிழமையான நேற்று (ஜனவரி 9) மாலை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரவணனை, லியாலட்சுமியின் பெற்றோர் நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், "எங்கள் மகள் மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனது மகள் லியாலட்சுமியின் உயிரிழந்த சம்பவத்தில் பள்ளி ஊழியர்கள் அனைவரும் நிர்வாகத்துக்கு உடந்தையாக இருந்து நாடகமாடி, உண்மையை மறைத்துள்ளனர்.
இதையும் படிங்க: குடியிருப்புகளுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள்..டிஜிபி தலைமையில் குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
நேற்று, முன்தினம் காவல் துறை அதிகாரிகள் எங்களை விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு அழைத்து பள்ளியின் சில சிசிடிவி பதிவுகளைக் காட்டினார்கள். அதில் எங்களுக்கு போதுமான உடன்பாடு இல்லை. பள்ளி வளாகத்திற்குள் வைக்கப்பட்டுள்ள அனைத்து கண்காணிப்பு கேமரா வீடியோ பதிவுகளையும் முழுமையாக எங்களிடம் வழங்க வேண்டும்.
எங்கள் குழந்தையின் ஆடைகளில் ரத்தக்கறை படிந்துள்ளது. மேலும், ஆடைகளில் எப்படி ப்ளீச்சிங் பவுடர் வாடை வந்தது. கைக்குழந்தை கூட விழ முடியாத அளவு உள்ள கழிவு நீர்த் தொட்டியில் எப்படி எங்கள் குழந்தை விழுந்தது. எங்கள் குழந்தை காலையில் அணிந்து சென்ற ஷூ வேறு, காவல் துறையினர் எங்களிடம் காட்டிய ஷூ வேறு.
எனவே, எங்கள் குழந்தையின் மரணம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டு, உண்மையைக் கண்டறிய வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். மேலும், பள்ளி நிர்வாகம் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அழிக்க முற்படுகின்றனர்," என்று உயிரிழந்த எல்.கே.ஜி பள்ளிக் குழந்தையின் தந்தை பழனிவேல் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.