சென்னை: ‘நேசிப்பாயா’ படத்தின் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில், சேவியர் பிரிட்டோ, சிநேகா தயாரிப்பில், இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’. இப்படத்தின் மூலம் மறைந்த நடிகர் முரளியின் மகனும், நடிகர் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நேசிப்பாயா திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இப்படத்தில் இளைஞர்களை கவரும் வகையில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் ஜோடி புத்துணர்ச்சியுடன் திரையில் தோன்றுகிறது. ’விருமன்’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அதிதி ஷங்கர், மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வரவேற்பை பெற்றார்.
இதனைத்தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நேசிப்பாயா படம் மூலம் இளைஞர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். அடுத்ததாக அதிதி ஷங்கர், விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் ஜோடியாக ’once more’ படத்தில் நடித்து வருகிறார். விஷ்ணுவர்தன் பாலிவுட்டில் கடைசியாக ’ஷேர்ஷா’ திரைப்படத்தை இயக்கினார். அந்த படத்திற்காக தேசிய விருது பெற்ற நிலையில், அடுத்ததாக பெரிய ஹீரோக்கள் படங்கள் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அறிமுக நாயகனை வைத்து ரொமான்டிக் காதல் கதை இயக்கியுள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா, விஷ்ணுவர்தன் கூட்டணியில் அறிந்தும் அறியாமலும், சர்வம், பில்லா என அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நேசிப்பாயா பாடல்களும் ஹிட்டாகியுள்ளது.
இதையும் படிங்க: மனதை வருடும் இனிமையான குரல்... 15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய இசை ஜாம்பவான் ஜெயச்சந்திரன்! - JAYACHANDRAN SONGS
மேலும் நேசிப்பாயா படத்தின் பின்னணி இசையும் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேசிப்பாயா படத்தில் ’நேசிப்பாயா என்னை’ என்ற பாடலை பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இந்த பாடல் வீடியோ நேற்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த பாடலில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேசிப்பாயா வீடியோ பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.