தமிழ்நாடு

tamil nadu

2007ல் தோல்வி.. 2024ல் வெற்றி! வீழ்ந்த இடத்தில் வென்று சாதித்த ராகுல் டிராவிட்! - Rahul Dravid

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 30, 2024, 11:10 AM IST

2007ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி இதே வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை தொடரில் தோல்வியை தழுவி குரூப் சுற்றிலேயே வெளியேறியது. தற்போது ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இந்திய அணி அதே வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் 20 ஓவர் உலக கோப்பை வென்று வரலாறு படைத்து உள்ளது.

Etv Bharat
Rahul Dravid (AP Photo)

பார்படோஸ்:9வது டி20 உலக கோப்பையை வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. பார்படோசில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 2வது முறையாக 20 ஓவர் உலகக் கோப்பை கைப்பற்றி சாதனை படைத்தது.

வெற்றிக் கோப்பையை உச்சி முகர்ந்த மகிழ்ச்சியில் திளைத்த கோடான கோடி இந்திய ரசிகர்களுக்கு சற்றும் எதிர்பாராத நேரத்தில் இடியாய் வந்து இறங்கிய செய்தி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலியும் அவரைத் தொடர்ந்து ரோகித் சர்மாவும் ஒய்வு பெறுவதாக வெளியிட்ட அறிவிப்பு தான்.

இரண்டு ஜாம்பவான்களும் இந்திய அணிக்காக செய்த காரியங்கள் எண்ணில் அடங்காதவை. ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி 50 டி20 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. அதிக முறை டி20 கிரிக்கெட் போட்டிகளில் வென்ற கண்ட கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் ரோகித் சர்மா.

விராட் கோலி, ரோகித் சர்மாவை தொடர்ந்து இந்திய அணியில் இருந்து விலகும் மூன்றாவது நட்சத்திரம், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட். ராகுல் டிராவிட் வழிகாட்டுதலில் இந்திய அணி இரண்டு உலகக் கோப்பைகளை நூலிழையில் கோட்டை விட்ட போதும், இறுதி வாய்ப்பை வெற்றிக் கனியாக மாற்றிக் கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் மற்றும் 2022ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை என ராகுல் டிராவிட் வழிகாட்டுதலில் இரண்டு பெரும் ஐசிசி தொடர்களை இந்தியா கோட்டைவிட்ட போதிலும் அதை மறக்கடிக்க செய்யும் வகையில் அமைந்தது 20 ஓவர் உலக கோப்பை வெற்றி.

கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி குரூப் சுற்றில் வெளியேறியது. இதே வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் வங்கதேசம் அணியிடன் தோல்வியை தழுவிய ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி பெருத்த ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது.

இந்நிலையில், அதே வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் ராகுல் டிராவிட் வழிகாட்டுதலின் கீழ் இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பையை வென்று வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. எப்போதும் அமைதியையும், பொறுமையையும் கடைபிடிக்கக் கூடிய ராகுல் டிராவிட் உலகக் கோப்பையை வென்ற தருணத்தில் தன்னையும் மீறி இளைஞராகவே மாறி துள்ளல் ஆட்டத்தில் ஈடுபட்டார்.

இது அவரை நன்கு அறிந்த சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட வீரர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. வெற்றியை தொடர்ந்து பேசிய ராகுல் டிராவிட், இந்திய வீரர்கள் அற்புதமான இளம் திறமைசாலிகள். அவர்களின் ஆற்றலும் நம்பிக்கையும் மிகைப்படுத்த முடியாத ஒன்று.

ஐசிசி கோப்பைக்காக நீண்ட காலமாக காத்திருந்தோம், ஆனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா இன்னும் பல கோப்பைகளை கொண்டு வரும். நாங்கள் மிகவும் கடினமாக உழைத்தோம், ஆனால் அந்த திருப்பத்தை கடக்க முடியவில்லை. ஆனால், இன்றைக்கு இந்த இளம் வீரர்கள் படை இன்னும் பல கோப்பைகளை வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.

இதையும் படிங்க:ஆட்ட நாயகன் சூர்யகுமார் யாதவ்! ஒரே கேட்ச்சால் ஆட்டம் திசை மாறியது எப்படி? - Suryakumar Yadav Catch

ABOUT THE AUTHOR

...view details