செயின்ட் வின்சென்ட்: செயின்ட் வின்சென்ட் நகரில் டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டியில் வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. இரு அணிகளும் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கியது. டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது. ஆஃப்கானிஸ்தான் தொடக்க ஆட்டகாரர்கள் ஆரம்பம் முதலே பொறுமையாக ரன்கள் சேர்த்தனர்.
சத்ரான், குர்பாஸ் இருவரும் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்த நிலையில், 50 ரன்களை கடக்கவே 8 ஓவர்கள் ஆனது. 29 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த சத்ரான், தன்சிம் பந்தில் அவுட்டானார். பின்னர் வந்த அசமதுல்லா 10 ரன்களுக்கு நடையை கட்டினார். வங்கதேச பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்துவீசி ஆஃப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களை கட்டுபடுத்தினர்.
ஓரளவு ரன்கள் சேர்த்த குர்பாஸ் 43 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் பெரியளவில் சோபிக்காத நிலையில் கேப்டன் ரஷித் கான் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டினார். 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது.
இதனைதொடர்ந்து எளிதான இலக்கை விரட்டிய வங்கதேசம், அதிரடியாக இன்னிங்ஸை தொடங்கியது. 12.1 ஓவர்களில் இலக்கை எட்டினால் வங்கதேசம் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு இருந்தது. எனினும் ஆட்டம் அவ்வப்போது மழையால் தடைபட்டதால் பேட்ஸ்மேன்களுக்கு கடினமானதாக அமைந்தது.
இரண்டாவது ஓவரை வீசிய ஃபருகி, ஹசனை எல்பிடபுள்யூ முறையில் அவுட்டாக்கி இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். இதற்கடுத்து 3வது ஓவரை வீசிய நவீன் உல் ஹக், சாண்டோ (5), சாகிப் அல் ஹசன் (0) ஆகியோரை அவுட்டாக்கி போட்டியில் திருப்புமுனை ஏற்படுத்தினார்.
இதனையடுத்து பந்துவீச ரஷித் கான் பந்துவீச்சில் அனல் பறந்தது. ஹிருதாய் (14), முகமதுல்லா(6) ஆகியோரை அடுத்தடுத்து அவுட்டாக்கினார். ஆனால் மறுமுனையில் லிட்டன் தாஸ் (54*) பொறுமையாக விளையாடி வங்கதேசத்திற்கு நம்பிக்கை அளித்தார். ஒவ்வொரு ரன்களுக்கும் பந்துகள் சம அளவில் இருந்ததால் போட்டியில் விறுவிறுப்பு கூடியது. இறுதியாக 7 பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முஸ்தபிசூர் பேட்டிங் செய்ய, நவீன் உல் ஹக் பந்து வீசினார்.
அப்போது பந்து பேடில் பட்டு செல்ல நவீன் உல் ஹக் எல்பிடபுள்யூவிற்கு அப்பீல் செய்தார். அம்பயர் அவுட் கொடுக்கவே ஆஃப்கானிஸ்தான் டக் வொர்த் லூவிஸ் (DLS) முறையில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது. ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான், நவீன் உல் ஹக் ஆகியோர் அதிகபட்சமாக தலா 4 விக்கெட் விழ்த்தினர். வரும் 27ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை ஆஃப்கானிஸ்தான் எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவை பந்தாடிய 'ஹிட்மேன்' ரோகித் சர்மா... அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா! - T20 World Cup 2024