நொய்டா:நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தர பிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நேற்று (செப்.9) தொடங்கியது. கடந்த சில நாட்களாக நொய்டா சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் போனது.
மைதானத்தில் வெள்ளக்காடு:
இருப்பினும், நேற்று நொய்டாவில் மழை பெய்யாத நிலையில், போட்டியை தொடங்கும் பணியில் நடுவர்கள் அணி நிர்வாகிகள் ஈடுபட்டனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக மைதானம் முழுவதும் மழை நீர் சூழ்ந்து காணப்பட்டது. கடந்த சில நாட்களாக பெய்த மழை நீர் மைதானத்தில் புகுந்து வெளியேற முடியாமல் தேங்கிக் கிடந்தது.
இதனால் டாஸ் போடுவதில் கால தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து மைதானத்தில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டனர். இருப்பினும், அவர்களால் எளிதில் மைதானத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவர முடியவில்லை. பந்துவீச்சாளர்கள் பந்து வீசும் இடம் தண்ணீர் தேங்கி காட்சி அளித்தது.
மைதானத்தில் Patch Work:
மேலும், மைதாத்தின் முதல் 30 யார்டு சர்கிள் பகுதியில் பல்வேறு இடங்களில் பேட்ச் ஒர்க் மேற்கொள்ளப்பட்டு இருந்ததால் அதில் மழைநீர் புகுந்து வெளியேற்றுவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. மேலும் மைதான ஊழியர்களுக்கு போதிய முன் அனுபவம் இல்லாததாலும் சீரமைப்பு பணிகளில் கடும் தொய்வு ஏற்பட்டது.
மாலை 4 மணி வரை சீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில் போட்டி நடுவர்கள், நியூசிலாந்து கேப்டன் டிம் சவுதி மற்றும் மிட்செல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் மைதானத்தை ஆய்வு செய்தனர். இருப்பினும் எந்த வித முன்னேற்றமும் இல்லாததால் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
2வது நாள் ஆட்டம் ரத்து:
தொடர்ந்து இன்று (செப்.10) இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற இருந்த நிலையில், காலையிலேயே மைதானத்தை சீரமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டது. மைதானத்தில் பேட்ச் ஒர்க் நடைபெற்ற இடங்களில் இருந்து புற்களை அகற்றி சீரமைக்கும் பணிகளில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டனர்.
மேலும், டேபிள் பேன், மினி காற்றாடி கொண்டு மைதானத்தை காய வைக்கும் பணியில் ஈடுபட்ட போதும் பிரயோஜனம் இல்லை. நீண்ட நேரத்திற்கு பின் இரண்டாவது நாள் ஆட்டமும் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மழை உள்ளிட்ட பேரிடர்கள் இன்றி ஒரு போட்டி டாஸ் கூடப் போடப்படாமல் இரண்டு நாட்கள் கைவிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதையும் படிங்க:Rinku Singh: துலிப் டிராபில் ரின்கு சிங்! அப்டேடட் பட்டியலை பிசிசிஐ வெளியீடு! - Duleep Trophy 2024