மும்பை:இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் 37 பந்துகளில் சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா.
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைசானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோல் பட்லர் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதையடுத்து இந்திய அணியின் சஞ்சு சாம்சனும், அபிஷேக் சர்மாவும் களமிறங்கினர். 7 பந்துகளில் 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என்று ஆட்டத்தை பற்ற வைத்த சாம்சன் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவர் அவுட்டானால் என்ன நான் இருக்கிறேன் என்று ரசிகர்களுக்கு சொல்லாமல் சொன்னது போல் தமது வழக்கமான அதிரடி காட்ட தொடங்கினார் மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா. இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் என்ற பாரபட்சமெல்லாம் இல்லாமல், அனைத்து பெளலர்களின் பந்துகளையும் சிக்ஸர், பவுண்டரி என்று மைதானத்தின் நாலாப்பக்கமும் சிதறடித்தார் அபிஷேக் சர்மா.