சென்னை:உத்தரகாண்டில் வருகிற ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 14ஆம் தேதி வரை 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டியானது, உத்தரகாண்டின் முக்கிய நகரங்களில் 11 மையங்களில், 31 பிரிவுகளின் கீழ் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்கும் 393 வீரர்களுகளை தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவர் ஐசரி கணேஷ் மற்றும் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தலைமையில் விளையாட்டு உபகரணங்களை வழங்கப்பட்டு, நேற்று (ஜன.25) வழியனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுடன் 102 அதிகாரிகள் கொண்ட குழு என மொத்தம் 495 பேர் உத்தரகாண்ட் சென்றுள்ளனர்.
முன்னதாக, அவர்களை வழியனுப்பும் வகையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 'வழியனுப்பும் நிகழ்ச்சியானது' நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவர் ஐசரி கணேஷ் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பொருளாளர் செந்தில் தியாகராஜன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) பொது மேலாளர் சுஜாதா ஆகியோர் பங்கேற்று போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் அணிவகுப்புக்கான அதிகாரப்பூர்வ சீருடைகள் அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து வீரர்களுக்கான சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினர்.
அப்போது பேசிய தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவர் ஐசரி கணேஷ், “குஜராத் மாநிலத்தில் நடந்த போட்டியில் தமிழ்நாடு அணி ஐந்தாம் இடம் பெற்றது. அதற்கு அடுத்து கோவாவில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு அணி பத்தாம் இடத்தை பெற்றது. இதற்கு காரணம் ஒலிம்பிக்கில் இடம்பெறாத போட்டிகள் அங்கு நடைபெற்றது. ஆனால், இந்த ஆண்டு முதல் மூன்று இடத்திற்குள் தமிழ்நாடு வரவேண்டும். இதனை மனதில் வைத்துக் கொண்டு வீரர்கள் விளையாட வேண்டும். வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். வீரர்கள் தங்கம் வெல்வதை மட்டுமே இலக்காக கொள்ள வேண்டும்” என கூறினார்.