டெல்லி: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 13 ஆண்டுகளுக்கு பிறகு விளையாடுவதால் அவரை காண அதிக அளவு ரசிகர்கள் கூடியுள்ளனர். பிரபல கிரிக்கெட் போட்டி தொடரான ரஞ்சிக் கோப்பையில் இன்று டெல்லி அணி மற்றும் ரயில்வேஸ் அணிகள் மோதும் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.
எப்போதும் போல ஒரு ரஞ்சி கிரிக்கெட் போட்டி இல்லாமல், இன்றைய ஆட்டத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் விராட் கோலி 13 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சி கிரிக்கெட் போட்டி தொடரில் களமிறங்குகிறார். ஆயுஸ் பதோணி தலைமையிலான டெல்லி அணியில் சாதாரண வீரராக களமிறங்கியுள்ளார். இன்று விராட் கோலியின் பேட்டிங்கை காண காலை முதல் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த ரஞ்சி போட்டிக்கு டெல்லி கிரிக்கெட் சங்கம் சார்பில் 10 ஆயிரம் ரசிகர்கள் வரை வருகை புரிவர் என எதிர்பார்க்கின்றனர். இன்று காலை முதலே டெல்லி மைதானத்திற்கு ரசிகர்கள் வரத் தொடங்கினர். இந்நிலையில், 6 ஆயிரம் பேர் அமரக்கூடிய கௌதம் காம்பீர் ஸ்டாண்ட் முதலில் ரசிகர்களுக்காக திறக்கப்பட்டது. ஆனால் கூட்டம் கட்டுக் கடங்காமல் வரத் தொடங்கியதால் 14 ஆயிரம் பேர் அமரக்கூடிய பிஷன் சிங் பேடி ஸ்டாண்டும் திறக்க நேர்ந்தது.
ரசிகர்கள் கூட்டத்திற்கு இடையே மோடியின் கான்வாய் அந்த சாலையை கடந்துச் சென்றது. டெல்லி கிரிக்கெட் சங்க செயலாளர் அசோக் சர்மா பேசுகையில், “நான் டெல்லி கிரிக்கெட்டில் 30 வருடத்திற்கு மேலாக பணிபுரிந்து வருகிறேன். ஆனால் இது போன்ற ஒரு கூட்டத்தை ரஞ்சி போட்டிக்கு பார்த்ததில்லை. இது கோலிக்கான ஆதரவை காட்டுகிறது. ரசிகர்கள் மைதானத்திற்குள் வரத் தொடங்கிய நேரத்தில் பிரதமர் மோடியின் கான்வாய் சாலையில் கடந்து சென்றது. அதனால் போலீசார் ரசிகர்களுக்காக மற்றொரு ஸ்டாண்டை திறக்க உத்தரவிட்டனர்” என கூறினார்.
இன்று போட்டி தொடங்கி கோலி களமிறங்கிய போது ரசிகர்கள் "கோலி, கோலி" என ஆரவாரம் செய்யத் தொடங்கினர். முதல் இன்னிங்ஸில் 12-வது ஓவரின் போது, கோலி இரண்டாவது ஸ்லிப்பில் நின்று பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவரை பாதுகாப்பு வளையத்தை மீறி, கோலியை நோக்கி ஓடி வந்தார். பின் கோலியிடம் சென்ற ரசிகர், அவரது காலை தொட்டு வணங்கினார்.
இதையும் படிங்க: தோனியின் சாதனையை முறியடித்த தினேஷ் கார்த்திக்.. ஓய்வுக்கு பிறகு தரமான சம்பவம்! - DINESH KARTHIK RECORD
அந்த ரசிகரை பின் தொடர்ந்து வந்த பாதுககாப்பு படையினர் அவரை தடுத்து நிறுத்தி அழைத்து சென்றனர். இதனால் போட்டியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. விராட் கோலி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் போட்டி தொடரில் ஒரு சதம் உட்பட 190 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.