திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இதில், திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு அரோகரா என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 4-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருக்கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோயிலில் கடந்த 9 நாட்கள் காலையிலும், இரவிலும் பல்வேறு வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலாவும், கார்த்திகை மகா தீபமும் ஏற்றப்பட்டுள்ளது.
பரணி தீபம்:
தீபத் திருவிழாவின் 10ஆம் நாளான இன்று (டிசம்பர் 13) வெள்ளிக்கிழமை மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது.அதனைத்தொடர்ந்து, ஏகன் அனேகனாகவும், அனேகன் ஏகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக, அருணாசலேஸ்வரர் கோயிலில் அண்ணாமலையார் சன்னதியின் முன்பு ஐந்து மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
இதையு படிங்க:"அண்ணாமலையாருக்கு அரோகரா" - திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் முழு விவரம்!
தொடர்ந்து, அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்ட பரணி தீபத்தினை, சிவாச்சாரியர்கள் கோயில் உட் பிரகாரத்தில் ஊர்வலமாக கொண்டு சென்று, கோயிலில் உள்ள அம்மன், விநாயகர், முருகர் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கு பரணி தீபத்தினை ஏற்றியுள்ளனர். இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு அண்ணமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்துள்ளனர்.