திருச்சிராப்பள்ளி:வைகுண்ட ஏகாதசியை ஒட்டி அனைத்து வைணவத் தலங்களிலும் அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு வைபவங்கள் நடைபெற்றன. இதில் பூலோக வைகுண்டமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாளைத் தரிசனம் செய்தனர்.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் பக்தர்களால் போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில். இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த டிசம்பர் 30ஆம் தேதியன்று திருநெடுந்தாண்டகத்துடன் இந்த விழா தொடங்கிய நிலையில் டிசம்பர் 31 ஆம் தேதி பகல் பத்து விழா தொடங்கியது .
இதையடுத்து பகல் பத்து என்னும் பத்தாவது நாளான நேற்று பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி அளித்தார். வைகுண்ட ஏகாதசி விழா நாட்களில் பெருமாள் (உற்சவர்) மூலஸ்தானத்திலிருந்து பல்வேறு அலங்காரங்களில் ஆழ்வார்கள், ஆச்சாரியார்களுடன் கோயில் பிரகாரங்களில் வலம் வந்து, பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதித்தார்.
பக்தர்கள் பேட்டி (ETV Bharat Tamil Nadu) பின், இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான இன்று ஜனவரி 10ஆம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு அதிகாலை 5.15 மணியளவில் தனுர் லக்னத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளி மாலை, வைர அபயஸ்தம் உட்பட பல்வேறு திரு ஆபரணங்கள் அணிந்து திருச்சுற்றில் உள்ள தங்க மரத்தைச் சுற்றி வந்து பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாகக் கடந்து வந்தார்.
இதையும் படிங்க:திருச்செந்தூர் கடலில் கரை ஒதுங்கிய கல்வெட்டு! அதில் இருந்த செய்தி தெரியுமா?
அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ரெங்கா! ரெங்கா! என பக்தி கோஷமிட்டவாறு பரமபதவாசலைக் கடந்துச்சென்றனர். பின்னர், பெருமாள் பக்தர்களுக்கு நேரடியாகச் சென்று காட்சி தரும் திருகொட்டகை பிரவேசம் கண்டருளினார். ஆயிரங்கால் மண்டபத்திற்கு வந்தடைந்து பக்தர்களுக்குப் பொதுஜன சேவை கண்டருளினார். ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை இன்று இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதனைத் தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து இன்று நள்ளிரவு 12 மணிக்குப் புறப்பட்டு அதிகாலை 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்று அடைகிறார்.
சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாளை நீண்டவரிசையில் நின்று பக்திபரவசத்துடன் சேவித்து வருகின்றனர். வைகுண்ட ஏகாதசி விழாவில் திருச்சி மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் பாதுகாப்பிற்காக வெளியூர்களிலிருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் தேவையான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளைக் கோயில் நிர்வாகம் மாநகராட்சி உடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு பெருமாள் சொர்க்க வாசலைக் கடந்து ஆயிரங்கால் மண்டபத்திற்குச் சென்றதற்குப் பின் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு பெருமாளுடன் பக்தர்களும் சொர்க்கவாசலை பக்தர்கள் கடந்து சென்றனர். இந்த விழவின் இராப்பத்து உற்சவம் வருகிற ஜனவரி 20ஆம் தேதி பெருமாள் மோட்சத்துடன் இனிதே நிறைவடைகிறது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் காமினி, மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.