கோயம்புத்தூர்:கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த நல்லட்டிபாளையத்தில் 200 ஆண்டுகள் பழமையான நஞ்சுண்டேஷ்வரர் கோயில் உள்ளது. நஞ்சுண்டேஷ்வரர் என்பது நஞ்சை உண்ட சிவன் எனவும், இந்த கோயிலுக்குச் செல்வதால் தங்களுடைய கால்நடைகள் நோய்கள் மற்றும் விஷ பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கப்படும், மனிதர்களுக்கு உண்டாகும் நோய்கள் தீரும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கையாகும்.
இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத இறுதியில் மூன்று நாட்கள் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவிற்கு நல்லட்டிபாளையம் கிராமத்தை சுற்றியுள்ள கிணத்துக்கடவு, அரிசிபாளையம், பொள்ளாச்சி, பட்டிணம், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகளுடன் கோயிலுக்கு வருகை புரிந்தனர்.
திருவிழா:
தேர்த் திருவிழாவின் முதல் நாளில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் 300-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் வந்திருந்தனர். இதில் பெரும்பாலான மாட்டு வண்டிகள் பொள்ளாச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலையில் வரிசையாக வந்தது. இதனை சாலையில் சென்ற அனைவரும் வியப்பாகப் பார்த்தனர்.
200 ஆண்டுகள்:
இதுகுறித்து கோயில் நிர்வாகிகளில் ஒருவரான மணி என்பவர் கூறுகையில், "எங்களுடைய முன்னோர் நஞ்சப்பநாயக்கரால் இக்கோயில் 1886-இல் கட்டப்பட்டது. அவருக்கு ஏற்பட்ட நோய் குணமானதைத் தொடர்ந்து மக்கள் இங்கு வழிபட தொடங்கினர். அந்த காலத்தில் கோயில் தேர் திருவிழா நடைபெறும் போது பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு ஜமீந்தார்கள் வந்து தங்கி தேர் திருவிழாவை பார்த்துவிட்டு வழிபாடு மேற்கொள்வார்கள்.
கோயிலுக்கு எங்களுடைய மூதாதையர்கள் 240 ஏக்கர் நிலம் எழுதி வைத்துள்ளனர். தனியார் நிர்வகிக்கும் கோயிலாக இருந்தாலும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து வழிபாடுகள் மேற்கொள்வார்கள். தங்களுடைய நோய்கள் குணமாக உப்பு, மிளகு வாங்கி சாமிக்கு வழிபாடு மேற்கொள்வார்கள். அவ்வாறு செய்தால் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை. அதனால் 200 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கதைத் தொடர்கிறது," என தெரிவித்தார்.