தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

ரிஷபத்திற்கு இடம் பெயர்ந்த குரு; தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு! - Guru Peyarchi 2024 - GURU PEYARCHI 2024

Guru Peyarchi 2024: மேஷத்தில் இருந்து இன்று ரிஷபத்திற்கு குரு மாறிய நிகழ்வையொட்டி, பழூர் அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாத சுவாமி கோயில், தேனி வேதபுரி தட்சிணாமூர்த்தி கோயில் மற்றும் மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதினத்திற்குச் சொந்தமான வள்ளலார் கோவில் ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 10:56 PM IST

ரிஷபத்திற்கு இடம் பெயர்ந்த குரு

தமிழ்நாடு: திருச்சி மாவட்டம், ஶ்ரீரங்கம் அருகே உள்ள பழூர் கிராமத்தில் அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த பிரசித்தி பெற்ற கோயிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. குரு பார்க்க கோடி நன்மை என சாஸ்திரங்கள் சொல்கிறது. அப்படிப்பட்ட குரு பகவான் இன்று மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார்.

இதனை ஒட்டி, ரிஷப ராசியினர் மற்றும் குரு பகவான் பார்வை கொண்ட ராசியினர் தங்கள் கஷ்டங்கள், கவலைகள் குறைய வேண்டும் என இந்த நாளில் குருபகவானை வழிபாடு செய்தனர். மேலும் சனிபகவான் ஆதிக்கம் கொண்ட ராசியினரும் இந்த குரு பெயர்ச்சி மூலம் கஷ்டங்கள் கொஞ்சம் குறையும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வழிபட்டனர்.

இதில் குருபகவானுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குருபகவானுக்கு மங்கள இசையுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், இந்த நவகிரக பரிகார ஸ்தலத்தில் 9 வாரம் வியாக்கிழமை பக்தர்கள் வந்து வழிபாடு செய்தால், குரு பெயர்ச்சி நிவர்த்தி ஆகும் என கோயில் அர்ச்சகர் கெளரி சிவாச்சாரியார் தெரிவித்தார்.

அதேபோல், தேனி வேதபுரி தட்சிணாமூர்த்தி கோயிலில் குருபகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அப்போது, குரு பகவானுக்கு வண்ணமலர் மாலைகளால் அலங்கரித்து, வேதாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகளை நடத்தினர். பின்னர், சரியாக மாலை 5:19 மணியளவில் குரு பெயர்ச்சியினை முன்னிட்டு, மூலவர் தட்சிணாமூர்த்திக்கு திரைகள் திறக்கப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும், மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதினத்திற்குச் சொந்தமான வள்ளலார் கோவில் என்று அழைக்கப்படும் குரு அனுக்கிரகத் தலமான ஶ்ரீ ஞானாம்பிகை உடனாகிய வதான்யேஸ்வரர் கோயிலில், தனி சந்நதியில் எழுந்தருளியுள்ள ஶ்ரீமேதா தெட்சிணாமூர்த்தி சன்னதியில் அருள்பாலிக்கிறார். மேலும் வேறெங்கும் இல்லாதவாறு இங்கு நந்தியின் மேல் ஸ்ரீமேதா தக்ஷிணாமூர்த்தி எழுந்தருளி காட்சி அளிக்கிறார். இந்தக் கோயிலில் குருபெயர்ச்சி விழா இன்று நடைபெற்றது.

இதனை ஒட்டி, ஶ்ரீமேதா தெட்சினாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு, தங்க கவசம் சாற்றி வழிபாடு செய்யப்பட்டது. பஞ்சமுக அர்ச்சனை, பஞ்சமுக தீபாரதனை, மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதினம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு இடம் பெயர்ந்தார் குரு.. வசிஷ்டேஸ்வரர் கோயிலில் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்! - Guru Peyarchi

ABOUT THE AUTHOR

...view details