தஞ்சாவூர்:கும்பகோணம் பாட்ராச்சாரியார் தெருவில் அமைந்துள்ள பழமையான ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ நவநீதகிருஷ்ண சுவாமி திருக்கோயிலில் ஆண்டு தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக 11 நாட்களுக்கு கொண்டாப்படுவது வழக்கம். இந்த 11 நாட்களும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் திருவீதியுலா நடைபெறும்.
அதேபோல் இந்த ஆண்டும் இவ்விழா சிறப்பாக கடந்த 19ஆம் தேதி நவகலச திருமஞ்சனத்துடன் தொடங்கி, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. இந்நிலையில் இன்று விழாவின் 8ஆம் நாள் மற்றும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் வெண்ணை உண்ணும் கிருஷ்ணனாக வெண்ணைத்தாழி அலங்காரத்தில், பின்புறம் மண்டியிட்ட பூச்சூடி நீண்ட தலைபின்னலிட்ட அலங்காரத்தில், நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, விசேஷ பல்லாக்கில் திருவீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனைகள் செய்தும், சிறப்பு தரிசனத்தில் பங்கு பெற்றும் மன உருக கிருஷ்ணனை பிராத்தனை செய்தனர்.