தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

ஈஷா மகா சிவராத்திரி விழாவில் அமித் ஷா பங்கேற்பு; முன்பதிவின்றி வருவோருக்கும் ஏற்பாடு! - MAHA SHIVRATRI 2025

ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் முன்பதிவின்றி நேரடியாக வருகை தரும் மக்கள் இலவசமாக கலந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

ஈஷா அறக்கட்டளையின் மண்டல ஒருங்கிணைப்பாளர் பாரகா
ஈஷா அறக்கட்டளையின் மண்டல ஒருங்கிணைப்பாளர் பாரகா (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2025, 9:49 PM IST

கோயம்புத்தூர்: ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (பிப்.22) நடைபெற்றது. இதில் ஈஷா அறக்கட்டளையின் மண்டல ஒருங்கிணைப்பாளர் பாரகா கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது;

அமித் ஷா பங்கேற்பு

" ஈஷாவில் 31-ஆவது மகா சிவராத்திரி விழா வரும் 26-ஆம் தேதி மிக பிரம்மாண்டமான அளவில் நடைபெற இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

ஈஷாவில் மகா சிவராத்திரி விழா வரும் 26-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் சக்தி வாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், தலைசிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன.

திருவைந்தெழுத்து மத்திரம்

ஒவ்வொரு ஆண்டும் நள்ளிரவு தியானத்தில் மட்டும் உச்சரிக்கப்படும் திருவைந்தெழுத்து மகா மந்திரத்தை இந்தாண்டு விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் தீட்சையாக சத்குரு வழங்கவுள்ளார். இதன் மூலம் தீட்சைப் பெறும் அனைவரும் அவரவர் இல்லங்களில் இனி திருவைந்தெழுத்து மத்திரத்தை தினமும் உச்சாடணை செய்ய முடியும்.

தியான செயலி

இதனுடன் ‘மிராக்கிள் ஆப் தி மைண்ட்’எனும் இலவச செயலியை சத்குரு அறிமுகப்படுத்த உள்ளார். தினமும் 7 நிமிடங்கள் மக்கள் தியானம் செய்யும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மக்களுக்கு முன்னுரிமை

மேலும் மகா சிவராத்திரி விழாவிற்கு நேரில் வரும் மக்களின் வசதிக்காக தேவையான பார்கிங், சுத்திகரிக்கப்பட குடிநீர், சுகாதாரமான கழிவறைகள், உடனடி மருத்துவ வசதி உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விழாவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் வருகை தரவுள்ளனர். இருப்பினும் தமிழ்நாடு மக்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் சிறப்பு தனி இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அன்னதானம்

மேலும் விழாவிற்கு முன்பதிவின்றி நேரடியாக வருகை தரும் மக்கள் இலவசமாக கலந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விழாவில் கலந்து கொள்ளும் லட்சக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

நேரலை

மகா சிவராத்திரி விழா இந்தியா முழுவதிலும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் 50 இடங்களிலும், கேரளாவில் 25 இடங்களிலும் நேரலை செய்யப்பட உள்ளது. இதனுடன் தமிழ், மலையாளம், ஓடியா, அசாமி, பெங்காலி உள்ளிட்ட 11 இந்திய மொழிகள் மற்றும் அரபிக், இத்தாலி, பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட 11 அயல் மொழிகள் என மொத்தம் 22 மொழிகளில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இசை நிகழ்ச்சிகள்

இவ்விழாவில் பங்கேற்கும் கோடிக்கணக்கான மக்கள் இரவு முழுவதும் விழிப்பாக இருக்க உதவும் வகையில் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகர் சத்ய பிரகாஷ், கர்நாடகாவை சேர்ந்த பாடகி சுபா ராகவேந்திரா, 'பாரடாக்ஸ்' என அழைக்கப்படும் தனிஷ் சிங், மராத்தி இசை சகோதரர்கள் அஜய் - அதுல், குஜராத் நாட்டுப்புற கலைஞர் முக்திதான் காத்வி மற்றும் இந்திய மொழிகளில் ஆன்மிகப் பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் வைரலான ஜெர்மன் பாடகி கசான்ட்ரா மே ஆகியோர் இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details