தூத்துக்குடி: தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா இந்த மாதம் 02ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி, நாளை (நவ.08) வரை நடைபெறுகிறது.
இதன் தொடர்ச்சியாக, கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா இன்று (நவ.07) திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் பக்தர்களின் கூட்டத்தில், அரகரோகரா கோசத்திற்கு மத்தியில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிலையில், கந்த சஷ்டி விழாவின் ஒரு பகுதியாக தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள் கோயில் அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கலையரங்கத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சூரசம்ஹார நிகழ்ச்சியான இன்று (நவ.07) 7 வயது சிறுமியான தியாவின் ஆன்மீக பாடல் கச்சேரி நடைபெற்றது.
அப்போது, சிறுமி தியா கந்த சஷ்டி விழா குறித்தும் சூரசம்ஹார நிகழ்வு குறித்தும் பாடலாக விவரித்து பாடினார். மேலும், முருகனின் பாடல்களை மிகவும் அருமையாகவும், அழகான முகபாவனைகளுடனும் பாடி அசத்தினார். அதிலும் குறிப்பாக, 'முருகா முருகா முருகா முருகா அரகரோகரா' என்ற பாடலை அங்கிருந்த பக்தர்கள் கண்ணிமைக்காமல் கண்டு ரசித்தனர்.