ஹைதராபாத்: நெஞ்சை உறைய வைக்கும் துரதிருஷ்டவசமான சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராசில் அண்மையில் நிகழ்ந்தது. காவலராக பணியாற்றி வந்த ஒருவர், தன்னைத்தானே கடவுள் என்று பகிரங்கப்படுத்திக் கொண்டதும், அவருடைய பேச்சில் மயங்கிய சாமானிய மக்கள், அவர் நடத்திய ஆன்மிக நிகழ்ச்சியில் (சத்சங்கம்) பங்கேற்றபோது நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 120 அப்பாவி பக்தர்கள் அநியாயமாக உயிரிழந்தனர்.
பல்லாயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடும் ஓர் ஆன்மிக நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததால் ஏற்பட்ட நிர்வாக குறைபாட்டின் காரணமாக இத்துயர சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மோசமான இச்சம்பவத்துக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தர வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
ஆனால், தங்களைத் தாங்களே கடவுள் என்று கூறிக்கொள்ளும் சாமியார்கள் நாடு முழுவதும் பெருகி வருவது சமூகத்தில் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இப்பிரச்னை குறித்து சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை ஹத்ராஸ் சம்பவம் உணர்த்தியுள்ளது. தெய்வீக சக்தி அல்லது அமானுஷ்ய சக்தியை கொண்டவர்கள் என்ற நிலைக்கு, இந்த சாமியார்களை சமூகம் உயர்த்தி பார்ப்பது அதன் தெளிவற்ற, குழப்பமான மனநிலையையே காட்டுகிறது. குழப்பான மனநிலையில் உள்ள, எளிதில் ஏமாறக்கூடிய அப்பாவி மக்களை, பக்தி என்ற பேரில் தன்வயப்படுத்தும் சாமியார்களும் ஹத்ராசில் நிகழ்ந்ததை போன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணம்.
ஹத்ராசில் ஆன்மிக நிகழ்ச்சியை நடத்திய சாமியாரின் பாதம் பட்ட மண்ணை எடுத்து தங்கள் நெற்றியில் இட்டுக்கொள்ள பக்தர்கள் கூட்டம் முண்டி அடித்ததே கூட்ட நெரிசலுக்கும், அதன் விளைவான உயிரிழப்புகளுக்கும் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆழமான மத மற்றும் கலாச்சார ரீிதியான நாகரிகத்தை கொண்ட இந்தியா போன்ற நாட்டில், தங்களது ஆன்மிக தேடலை நிறைவேற்றிக் கொள்ள தனிநபர்கள், ஹத்ராசில் நடத்தப்பட்டதை போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதென்பது ஒன்றும் வியப்புக்குரிய விஷயமல்ல. ஆனால், சமூகத்தின் ஆன்மிக தேடல்களை பயன்படுத்திக் கொள்ள, பல அரைக்குறை சாமானியர்கள் தோன்றி உள்ளதும், அவர்கள் சமூகத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியை உலுக்கும் விதத்திலான தவறுகளுக்கு காரணமாகின்றனர் என்பதும் நிதர்சனம்.
மேலும், தனிநபர்களின் மனதில் ஆன்மிக உணர்வை தூண்டவும், சமூகங்களை ஒருங்கிணைக்கவும் உதவும் சமூக மற்றும் மத நிகழ்வுகளை ஒருவரின் கருத்தியல் முன்கணிப்புகளின் விளைவாக எதிர்மறையாக சித்தரிப்பது தவறான அணுகுமுறையாகும். ஒன்றன் மீதான நம்பிக்கை, மூடநம்பிக்கை கோட்பாடாக மாறும்போது தான் பிரச்னை எழுகிறது. கடவுள் வேஷம் போடும் பல பாசாங்குக்காரர்கள் பக்தி என்ற பேரில் வெறித்தனத்தை ஆதரிக்கின்றனர். இது மனித உணர்வை மழுங்கடிக்க செய்கிறது. இறுதியில் அறிவு மற்றும் ஆன்மிக வளர்ச்சியை தடுக்கிறது.