கோயம்புத்தூர்: திராவிட இயக்கம் இருக்கும் வரை சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருப்போம் எனவும், கிறிஸ்தவ மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, SPC பெந்தெகோஸ்தே சபைகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கிறிஸ்தவன் என்பதில் பெருமை
அங்கு நிகழ்ச்சியில் பேசிய அவர், "நானும் ஒரு கிறிஸ்துவன். இது பலரைக் கோபப்படுத்தும். அனைத்து மதங்களும் அடிப்படையில் அன்பை போதிக்கின்றது. மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஒரு சிலரும் உள்ளனர். என்னை எந்த மதத்தைச் சேர்ந்தவனாக நீங்கள் நினைக்கிறீர்களோ, நான் அந்த மதத்தைச் சேர்ந்தவன்.
SPC பெந்தெகோஸ்தே சபைகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டத்தில் கோவையில் இன்று கலந்து கொண்டோம். இச்சிறப்புக்குரிய நிகழ்வில், நலத்திட்ட உதவிகளை வழங்கி அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தோம். சிறுபான்மையின மக்களின் பாதுகாவலனாக தி.மு.கழகமும், நம்… pic.twitter.com/QgShyd8059
— Udhay (@Udhaystalin) December 18, 2024
மதரீதியான அவதூறு பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மக்களவையில் தீர்மானம் கொண்டு வந்தபோது அதிமுக அதனை ஆதரிக்கவில்லை. இதன் மூலமாக அதிமுக - பாஜக மறைமுகக் கூட்டணி தொடர்கிறது என்பது உறுதியாகிறது. அதிமுக பொதுக்குழுவில் கூட்டத்தில், மத்திய பாஜக அரசைக் கண்டித்து ஒரு தீர்மானமும் கொண்டுவரப்படவில்லை," என்று தெவித்தார்.
இந்நிகழ்வில், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் மர்ற்ய்ம் மேயர் கா.ரங்கநாயகி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு, டான் பாஸ்கோ பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின், நானும் என் மனைவியும் கிறிஸ்தவர்கள் என பேசியபோது, பாஜக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் அதை பிரச்னையாக பேசின.
இந்துகள் பண்டிகைக்கு மட்டும் திமுக அரசு வாழ்த்து சொல்வதில்லை எனவும், கிறிஸ்தவர்கள், இசுலாமியர்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில் மட்டும் திமுக தலைவர்கள் பெருமை கொள்கின்றனர் எனவும் கருத்துகள் பதிவு செய்திருந்தனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.
நான் முதல்வன் நிகழ்வு
கோவை தடாகம் பகுதியில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 'நான் முதல்வன்' திட்டத்தின் சார்பில் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையம் தொடக்க விழா நேற்று (டிச.18) புதன்கிழமை நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சிறப்பாக பயிற்சி வழங்கிய Skill Trainers -க்கு பரிசுத் தொகை, முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ள மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் ஆகியவற்றை வழங்கியுள்ளார்.
பின்னர், விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ரூ.31 கோடி மதிப்பீட்டில் மாநிலம் முழுவதும் 29 இடங்களில் திறன் மேம்பாட்டு மையங்கள் மற்றும் வேலை வாய்ப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 29 திறன் மையங்கள் உலக தரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக 2 ஆயிரத்து 900 கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
நான் முதல்வன் திட்டம்:
முதல்வரின் கனவு திட்டமான ‘நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் நடத்தப்பட்டுள்ள வேலைவாய்ப்புகளில், சுமார் 3 ஆயிரத்து 700 பேர் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.42 லட்சம் வரையிலான ஊதியத்தில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த திறன் மேம்பாட்டு மையம் சார்பில், 6 பாலிடெக்னிக் கல்லூரிகளில் ரூ.10 கோடி செலவில் ஸ்மார்ட் மேனுபேக்சரிங் சென்டர் (Smart Manufacturing Center) அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பார்முலாவாக திராவிட அரசு உள்ளது. கருணாநிதி அரசுக் கல்லூரிகளை தொடங்கி முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கினார்.
இதையும் படிங்க: "வனத்துறை தற்காலிக ஊழியர்களுக்கு அமைச்சர் பொன்முடி சொன்ன நற்செய்தி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாணவர்களும் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும், தொழில்முனைவோராக வேண்டும் என்று நான் முதல்வன் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில், தமிழக தலைமை செயலர் பங்கேற்று ‘நான் முதல்வன்’ திட்டம் குறித்து பேசியுள்ளார். இத்திட்டத்திற்கு உலகெங்கும் வரவேற்பு கிடைத்துள்ளது.
பாலமாக செயல்படும் நான் முதல்வன் திட்டம்:
நான் முதல்வன் திட்டத்தின் வழிகாட்டி வகுப்பு, திறன் பயிற்சி வகுப்பு, வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றப்பட்டுள்ளது. அவர்களில் 2 லட்சம் பேருக்கு பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் கனவுத்திட்டமான #நான்_முதல்வன்_திட்டம், லட்சோப லட்ச தமிழ்நாட்டு இளைஞர்களின் கல்விக்கும் - வேலைவாய்ப்புக்கும் கை கொடுத்து வருகிறது.
— Udhay (@Udhaystalin) December 18, 2024
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 29 Skill and Placement Training Centres அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில்… pic.twitter.com/At3h3mpgrW
இன்று (டிசம்பர் 18) தொடங்கப்பட்டுள்ள பயிற்சி, திறன் மேம்பாட்டு மையத்தில், பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்குத் தேவையான அனைத்து பயிற்சிகளும், திறன்களும் பயிற்றுவிக்கப்படும். ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற பன்னாட்டு மொழிகள் கற்றுக்கொடுக்கப்படும். இந்தத் திட்டம் கல்லூரிக்கும் தொழிற்சாலைக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படும்," இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.