ஐதராபாத் : உள்நாட்டிலேயே செமி கண்டக்டர் சிப் உற்பத்தி செய்ய 21 பில்லியன் டாலர் மதிப்பிலான முன்மொழிவுகளை மத்திய அரசு மதிப்பாய்வு செய்து வருகிறது. இதில் இந்தியாவில் செமி கண்டக்டர் சிப் தயாரிப்பு பணியில் ஈடுபட உள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பெரு நிறுவனங்கள் மும்முரம் காட்டி வருகின்றன.
இதில் இஸ்ரேலை சேர்ந்த டவர் செமிகண்டக்டர் லிமிடெட் நிறுவனம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 9 பில்லியன் டாலர் மதிப்பில் செமிகண்டக்டர் சிப் ஆலையை திறக்க ஆர்வம் காட்டி வருகிறது. அதேநேரம் உள்நாட்டு பெருநிறுவனமான டாடா நிறுவனமும் அதே குஜராத்தில் 8 பில்லியன் டாலர் மதிப்பில் செமி கண்டக்டர் ஆலையை திறக்க தீவிரம் காட்டி வருகிறது.
செமி கண்டக்டர் துறை கண்டு வரும் வளர்ச்சி புவிசார் குறியீட்டின் அதிக போட்டிமிக்க களமாக மாறி வருகிறது. அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகள் உள்நாட்டு சிப் உற்பத்தியை பலப்படுத்த தீவிரமாக முயன்று வருகின்றன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவை சர்வதேச உற்பத்தி மையமாக மாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச நிறுவனங்களுக்கு ஏற்றவாறு பல்வேறு சலுகைகள் உள்ளிட்டவைகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இந்த முயற்சி, விலையுயர்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதை குறைத்து, இந்தியாவில் ஸ்மார்ட்போன் அசம்பிளி உள்ளிட்ட தொழிகளை விரிவுபடுத்த நோக்கமாக கொண்டு உள்ளது.
சிப் உற்பத்தியை இந்தியாவில் ஊக்குவிக்க ஏதுவாக அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஆகும் செலவுகளில் பாதியை மானியமாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. மேலும் இதற்காக 10 பில்லியன் டாலர் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு முன்னர் இந்த துறையில் ஏற்பட்ட சறுக்கல்கள் காரணமாக, செமிகண்டக்டர் துறையில் தன்னிறைவு பெறும் நோக்கத்தில் இந்தியா நிலையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, இந்த திட்டத்திற்கு தேவையான நிதி பங்களிப்பு மற்றும் முதலீடுகளை பெரும் டெக் நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் கூகுள் மூலம் பெற்று இந்திய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி சுற்றுச்சூழல் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஐபோன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை இந்தியாவில் இருந்து செயல்படுத்தி வருகிறது.
அதேபோல், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் இன்க் நிறுவனமும் இந்த ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து செல்போன் அசம்பிளுக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மென்பொருள் நிறுவனமான மைக்ரான் டெக்னாலஜி இன்க் செமிகண்டக்டருக்கு தேவையான நிதியை வழங்கி வருகிறது.
இதற்காக குஜராத்தில் 2 புள்ளி 75 பில்லியன் டாலர் மதிப்பிலான அசம்பிளி மற்றும் சோதனை மையத்தை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. குஜராத்தில் உள்ள தோலேரா என்ற டவுனை செமி கண்டக்டர் சிப் தயாரிப்புகான மையமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
டவர் செமி கண்டக்டர் நிறுவனம் தனது முன்மொழியப்பட்ட ஆலை மூலம் 10 ஆண்டுகளில் மாதத்திற்கு 80 ஆயிரம் சிலிக்கான் சிப்களை தயாரிக்க திட்டமிட்டு உள்ளது. அதேபோல் டாடா குழுமமுன், பவர் சிப் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து சிப் தயாரிப்புக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த இரண்டு திட்டங்களும் நாட்டின் நுகர்வோர் எலக்ட்ரானிக், வாகன தொழிற்சாலை, மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தேவையான தேர்ந்த செமிகண்டக்டர் சிப்களை வழங்குவதையே நோக்கமாக கொண்டு உள்ளன. அதேநேரம், நாட்டின் கிழக்கு பகுதியில் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான பேக்கேஜிங் ஆலையை நிறுவ டாடா நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
இந்த முயற்சியின் மூலம் நாட்டில் ஸ்மார்ட்போன் பாகங்கள் மற்றும் அசெம்பிளி ஆகியவற்றில் தற்போதுள்ள வளர்ச்சிகளை அடிப்படையாக கொண்டு, உயர் தொழில்நுட்பத் துறைகளில் முதலீடுகளை பெருக்குவதற்கான முயற்சியில் டாடா நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில் ஜப்பானை சேர்ந்த Renesas Electronics Corp நிறுவனம், இந்தியாவில் சிப் பேக்கேஜிங் துறையில் இணைந்து பணியாற்றி சரியான கூட்டாளியை தேடி வருகிறது. அனைத்து சிப் தொடர்பான முன்மொழிவுகளுக்கு அடுத்த சில வாரங்களில் மத்திய கேபினட் அமைச்சகத்தால் ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் மானியங்களை பெற முன்மொழிவுகளை சமர்பித்து உள்ள நிறுவனங்கள் விரிவான தகவல்கள், தொழில்நுட்ப கூட்டாளிகள், நிதி சார்ந்த ஏற்பாடுகள், மார்க்கெட் இலக்கு உள்ளிட்ட செமி கண்டக்டர் உற்பத்தி தொடர்பான அனைத்து தகவல்களையும் விரைவாக வழங்க தயாராக இருக்க வேண்டும்.
20வது நூற்றாண்டில் எண்ணெய்க்காக உலக நாடுகளிடையே கடும் போட்டி நிலவிய நிலையில், 21வது நூற்றாண்டில் செமிகண்டக்டர் சிப்களுக்கான போட்டியாக மாறி உள்ளது. இந்த சிப்கள் மூலம் கார்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஸ்மார்ட் போன்கள், எலக்ட்ரானிக் உபகரணங்கள், ஆயுதம் உள்ளிட்ட நவீன யுகத்திற்கு தேவையான பல்வேறு பொருட்களை உருவாக்குவதற்கான அடிப்படைத் தேவையாக உள்ளது.
உலகளவில் 570 பில்லியன் டாலர் சந்திப்பை சிப் உற்பத்தி சந்தை கொண்டு உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் அதன் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலராக மாறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் சிப்களுக்கான சந்தை மூன்று விதமாக பிரிக்கப்படுகிறது. டிசைனிங், உற்பத்தி மற்றும் அசம்பிளிங் ஆகிய மூன்றாக வகைப்படுத்தப்படுகிறது.
இதில் சிப் டிசைனிங் துறையில் உலகளவில் அமெரிக்கா கொடி கட்டி பறக்கிறது. இந்த துறையில் அமெரிக்க நிறுவனங்கள் ஏறத்தாழ 46 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. மேலும் சிப் டிசைன் மென்பொருள் மற்றும் உரிமம் விற்பனை உள்ளிட்ட துறைகளில் அமெரிக்க நிறுவனங்கள் 76 சதவீதம் ஆக்கிரமித்து உள்ளது.