தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

பூதாகரமாகும் கச்சத்தீவு விவகாரம்! தேர்தல் யுக்தியா? மீனவர்கள் மீது அக்கறையா? வரலாறு கூறுவது என்ன? - Katchatheevu Island - KATCHATHEEVU ISLAND

விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாக வெடித்து உள்ளது. 1974 ஆம் ஆண்டு இந்திரா காந்தி அரசால் இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட சம்பவம் மற்றும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்று வெளியிட்டிருக்கிறார் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை. இலங்கை கடன் கேட்டு நின்ற போது, கச்சத்தீவை கேட்டு வாங்கியிருக்கலாமே என கேள்வி எழுப்பியிருக்கிறது திமுக.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 1, 2024, 7:12 PM IST

ஐதராபாத் :மக்களவைத் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே பாக் ஜலசந்தி பகுதியில் உள்ள கச்சத்தீவு இந்திய அரசியலின் பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுவில் இருக்கும் தகவல்களை பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். இதன்படி, 1974ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு வழங்குவது தொடர்பான முடிவெடுத்த போதேஇந்த தகவல், வெளியுறவுத்துறை செயலாளர் கேவல் சிங்கால், அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கச்சத்தீவு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு எம்.பி.க்கள் டெல்லியில் போராட்டம் நடத்தியதையும், நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. செழியன் பேசியதையும் குறிப்பிட்டார். எனவே கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதில், திமுகவின் பங்களிப்பும் முழுமையாக இருப்பதாக குறிப்பிட்டார். இதனையே தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியும், நம்ப முடியாத கட்சி காங்கிரஸ் என குற்றம் சாட்டியுள்ளார்.

கச்சத்தீவு பிரச்சனை இதுவரை : இந்த பிரச்சனையின் பின்னணி என்னவென்று தற்போது பார்க்கலாம். இந்தியா - இலங்கைக்கு இடையே பாக் ஜலசந்தி பகுதியில் 285 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கச்சத்தீவு. மக்கள் யாரும் வசிக்காத இந்த சிறிய தீவு 1 புள்ளி 6 கிலோ மீட்டர் நீளமும் 300 மீட்டர் அகலமும் கொண்டது. எரிமலை வெடிப்பு காரணமாக இத்தீவு உருவாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது. தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் இருந்து 33 கிலோ மீட்டர் வடகிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியிலும், இலங்கையின் யாழ்பாணத்தில் இருந்து 62 கிலோ மீட்டர் தென்மேற்கு பகுதியிலும் இந்த கச்சத்தீவு அமைந்து உள்ளது.

கச்சத்தீவில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை. அங்கு ஒரே கத்தோலிக்க தேவாலயம் மட்டும் உள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் அங்கு உள்ள அந்தோனியார் திருத்தலத்திற்கு இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த பக்தர்கள் சென்று திருவிழா கொண்டாடுவது வழக்கம். கடந்த 2023ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் இருந்து ஏறத்தாழ 2 ஆயிரத்து 500 பக்தர்கள் கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு சென்றனர். 2024ம் ஆண்டு நடைபெற்ற திருவிழாவை தமிழ்நாடு மீனவர்கள் புறக்கணித்தனர்.

1975 ம் ஆண்டுக்கு முன்பு வரை அங்கு தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழில் ஈடுபட்டு உள்ளனர். 17வது நூற்றாண்டில் இருந்து ராமநாதபுரம் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் கச்சத்தீவு இருந்துள்ளது. டச்சு கிழக்கு இந்திய கம்பெனி மற்றும் பிரிட்டீஷ் கிழக்கு இந்திய கம்பெனி ஆகியவை இரண்டு அப்போதைய ராமநாதபுரம் சமஸ்தானத்திடம் இருந்து கச்சத்தீவை குத்தகைக்கு எடுத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுதந்திரத்திற்குப் பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்த சில தகவல்கள் தற்போதைய தகவல் அறியும் உரிமைச் சட்ட மனு (RTI) மூலம் தெரிய வந்துள்ளது. இதன் மூலம், அப்போது இந்தியாவின் தென் கோடியில் உள்ள நாடான இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு வழிகளை இந்தியா ஆலோசித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக 1961ம் ஆண்டில் பேசிய பிரதமர் ஜவகர்லால் நேரு, கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பதற்கு நான் தயங்க மாட்டேன் என பேசியுள்ளார். 1960ம் ஆண்டிலேயே, கச்சத்தீவு மீது இந்தியாவுக்கு உள்ள உரிமை குறித்து , அட்டார்னி ஜெனரல் செதல்வாட் (MC Setalvad) கருத்து தெரிவித்ததையும் இந்த ஆவணம் குறிப்பிடுகிறது. இதனைத் தொடர்ந்து 1974ம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. ஆனாலும் தீவில் மீன் பிடிக்கவும், வலைகளை காய வைக்கவும் இந்திய மீனவர்களுக்கு இருந்த உரிமை 1976ம் ஆண்டு எமர்ஜன்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஒப்பந்தத்தின் மூலம் மறுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கச்சத்தீவு அருகே பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டு மீனவர்கள் அடித்து துரத்தப்பட்டனர். இவற்றிக்கெல்லாம் உச்சமாக இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த கால கட்டத்தில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவதும் நிகழ்ந்தது. சுமார் 700க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.

கச்சத்தீவின் முக்கியத்துவம்: இந்தியா-இலங்கை இடையிலான பாக்சலசந்தி நீரிணையில் இருக்கும் கச்சத்தீவு பாதுகாப்பு ரீதியாக முக்கியத்துவம் பெறுவதைப் போன்று மீனவர்களின் வாழ்வாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பவளப்பாறைகள் நிறைந்த இந்த பகுதியில் இயல்பாகவே மீன்வளம் அதிகமாக காணப்படும். வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள இந்த பகுதியில் மீன் பிடிக்கும் வாய்ப்பில்லை எனில், தமிழ்நாடு மீனவர்கள் இந்தியப் பெருங்கடலுக்குச் சென்றுதான் மீன்பிடித்தலில் ஈடுபட வேண்டும். இதற்கான பெரிய படகுகளும், தொழில்நுட்ப வசதிகளும் அனைத்து மீனவர்களுக்கும் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை.

பாஜக என்ன சொல்கிறது?: டெல்லியில் இன்று (01.04.2024) செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர், கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். தமிழ்நாட்டு பிரச்சனைகளில் திமுகவுக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லை என பிரதமர் நரேந்திர மோடி தமது எக்ஸ் வலைத்தள பதிவில் சாடியுள்ளார்.

திமுக தரப்பின் பதில் என்ன?: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சமூகவலைத் தள பதிவில், பத்தாண்டுகளாக கும்பகர்ண தூக்கத்தில் இருந்தவர்களுக்கு தற்போது, திடீரென மீனவ பாசம் வந்திருப்பதாக விமர்சித்துள்ளார்.

திமுகவின் இளைஞரணி செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், எக்ஸ் வலைத்தள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நீங்கள், அவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலும், கைதுகளும், படகு பறிமுதல்களும் தொடர்ந்து நடக்கிறதே, இதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை?" என பிரதமர் நரேந்திர மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

பொருளாதார ரீதியாக திவாலாகும் நிலையில் இலங்கை அரசு இருக்கும் நிலையில், சமீபத்தில் கூட இந்திய அரசிடமிருந்து சுமார் 34 ஆயிரம் கோடி ரூபாயை இலங்கை வாங்கியிருப்பதை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சுட்டிக்காட்டியுள்ளார். இப்படிப்பட்ட சூழலிலாவது கச்சத்தீவை கேட்டு வாங்கியிருக்க வேண்டாமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கச்சத்தீவு விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாடு என்ன?:கச்சத்தீவு ராமநாதபுரம் ஜமீன்தாரரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததை மேற்கொள் காட்டிய தமிழ்நாடு, தீவு மற்றும் அங்கு மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை இருப்பதாக தெரிவித்து உள்ளது. 1991ஆம் ஆண்டு தமிழக சட்டசபையில் கச்சத்தீவை மீட்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திமுக, அதிமுக என இரு கட்சிகளின் ஆட்சிகளின் போதும் கச்சத்தீவை மீட்கக் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கச்சத்தீவை திரும்பப் பெறுவதால் என்ன லாபம்?:பொருளாதார ரீதியாக இன்று பலவீனமான நிலையில் இருந்த போதும், இந்தியாவை நம்பி இருந்தாலும் இலங்கை அரசு சீனா உடனான தனது உறவை கைவிடவில்லை. இலங்கையில் அம்பந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளில் சீனாவின் பங்களிப்பு இருக்கிறது. பூகோள ரீதியாக இது இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகும். சர்வதேச கடல் சட்டத்தின் படி, ஒரு நாட்டின் நில எல்லையிலிருந்து 12 நாட்டிக்கல் கடல் மைல்கள் வரையிலும் அந்நாட்டின் எல்லையாக வரையறுக்கப்பட்டும். இதனால் கச்சத்தீவு வரையிலும் இந்தியாவின் நில எல்லை விரிவடையும் போது, பாதுகாப்பு சார்ந்த பல்வேறு விவகாரங்களிலும், நிலவியல் ரீதியாக இந்தியா வலுவடையும்.

இதையும் படிங்க :கச்சத்தீவு விவகாரம்: "கலர் கலராக பிரதமர் மோடி பொய் சொல்கிறார்" - ஆர்.எஸ் பாரதி கடும் விமர்சனம்!

ABOUT THE AUTHOR

...view details