திருவண்ணாமலை: அதிகாலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி எனவும், மலையேறும் பக்தர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் உள்ளிட்ட விதிமுறைகள் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் பகுதியில், சுமார் 4 ஆயிரத்து 560 அடி உயர பர்வதமலை மீது, உலக பிரசித்தி பெற்ற பிரம்மராம்பிகை அம்மன் சமேத மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மலை உச்சியில் உள்ள இக்கோயிலை, 3ஆம் நூற்றாண்டில் நன்னன் எனும் குறுநில மன்னன் கட்டியதாகக் கூறப்படுகிறது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த பர்வதமலைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரம், கர்நாடகா, தெலங்கானா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் மலையேறி, தங்கள் கைகளாலேயே தாங்கள் கொண்டு செல்லும் பொருட்களைக் கொண்டு சிவனிற்கு அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.
பர்வதமலை கோயிலுக்கு, விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் மலையேறி, நீண்ட நேரம் காத்திருந்து வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், படிக்கட்டுகள், பாறைகள், செங்குத்தான ஏணிப்படி, ஆகாயப்படி என கடுமையான பாதைகளைக் கடந்து, கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்பது இளைஞர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், நாளுக்கு நாள் பர்வதமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கட்டுப்பாடுகள்:
பர்வதமலை ஏறும் பக்தர்கள் மலையை முறையாகப் பராமரிக்காமல், குப்பைகளை ஆங்காங்கே வீசிச் செல்வதும், நெகிழிக் (Plastic Waste) கழிவுகளை மலைமீது விட்டுச் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. தற்போது, பர்வதமலை பகுதி தூய்மையாக இல்லாமல் உள்ள சூழல், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்களைக் கவலையடையச் செய்துள்ளது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இதுகுறித்து வனத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பர்வதமலை மலை ஏறுவதற்குக் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "உண்டியலில் போட்ட அனைத்தும் முருகனுக்கே சொந்தம்" - மொபைலைப் பறிகொடுத்தவருக்கு ஷாக் கொடுத்த திருப்போரூர் கோயில்!
அதாவது, புதுப்பாளையம் வனச்சரகம் சார்பில், சூழல் மேம்பாட்டுக் கட்டணம் என்ற பெயரில் ஒரு நபருக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதில், 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மட்டும் கட்டணம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பர்வத மலையைச் சுற்றியுள்ள தென்மகாதேவமங்கலம், கடலாடி, பட்டியந்தல், வீரளூர், சீனந்தல், கெங்கலமகாதேவி, நல்லான் பிள்ளை பெற்றாள், அருணகிரி மங்கலம் கோயில், மாதிமங்கலம் ஆகிய வருவாய் கிராமங்களில் வசிப்பவர்களுக்கு மட்டும் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, பக்தர்களின் பாதுகாப்பு கருதி பர்வதமலை மீது ஏற புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அதிகாலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் எனவும், மற்ற நேரங்களில் மலையேறும் பாதை மூடப்படும் எனவும், இந்த நடைமுறைகள் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் புதுப்பாளையம் வனச்சரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.