கோயம்புத்தூர்:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-2025ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். சரியாக இன்று (பிப்.01) காலை 11 மணிக்கு தொடங்கி 57 நிமிடங்களில் பட்ஜெட் உரையை அவர் முடித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பினர் பேட்டி இதுவே இவர் வாசித்த பட்ஜெட் உரைகளில் மிகக் குறைவான நேரம் எடுத்துக் கொண்ட உரையாகும். நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடக்கவிருப்பதால், முழு பட்ஜெட்டுக்குப் பதில் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.
இந்த இடைக்கால பட்ஜெட்டில் ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும், புதிய விமான வழித்தடங்கள் உருவாக்கப்படும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் போன்ற அறிவிப்புகள் வெளியாகின.
மேலும், 40 ஆயிரம் சாதாரண ரயில்கள், வந்தே பாரத் ரயில் திட்ட பெட்டிகளாக தரம் உயர்த்தப்படும், மின்னணு வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜ் மையங்கள் அமைக்கப்படும், நாட்டின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த 11.11 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்த பட்ஜெட் தொடர்பாக இந்திய தொழில் கூட்டமைப்பினர் தலைவர் செந்தில் கணேஷ் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், “மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் உள்கட்டமைப்பில் அதிக முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில், விமானம், சாலை மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியம் வாய்ந்ததாக அமையும்.
உலக அளவில் டிஜிட்டல் முதலீடுகளில் முதலிடத்தில் நாம் உள்ளோம். டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுத்துவதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். டீப் டெக் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் தனிநபர் வருமானம் அதிகரித்து வருகிறது. வந்தே பாரத் ரயில்கள் அதிகரித்தாலும், சாதாரண ரயில்களும் இயக்கப்படும். சோலார் எனர்ஜிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறுந்தொழில்களுக்கென தனியாக எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கூட்டமைப்பின் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், “கடந்த 5 ஆண்டுகளில் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது. பட்ஜெட்டில் 3 ரயில் காரிடர்களை நிதியமைச்சர் அறிவித்துள்ளார். ரயில்வே காரிடர் திட்டம் வரவேற்கத்தக்கது. கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். விவசாயப் பொருட்களை சேகரித்து வைக்க நிதி ஒதுக்கீடு செய்வது வரவேற்கத்தக்கது.
மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் ஸ்டேஷன் அமைத்தால் சிறு, குறு தொழில் முனைவோருக்கு உதவும். இதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது, வரவேற்கத்தக்கது. கோவை விமான நிலையத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:Budget 2024: மூலதன செலவீனங்களுக்கான நிதி அதிகரிப்பு - வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் - நிர்மலா சீதாராமன்!