விண்வெளியில் பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, விண்வெளியில் தாவர வளர்ப்பு சோதனை முயற்சியில் சாதனை படைத்துள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.
வருங்காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு, விண்வெளியில் வேளாண் சூழலை ஏற்படுத்துவதற்கான முயற்சியையும், விண்வெளியில் வேளாண் செய்யமுடியுமா? என்பதை ஆராயும் வகையில், இஸ்ரோ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த டிசம்பர் 30ம் தேதி, அந்திராவின் ஸ்ரீஹரிகோட்டவில் இருந்து 'பி.எஸ்.எல்.வி சி-60' (PSLV C-60) ராக்கெட்டில் 24 செயற்கை கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது.
இந்த 24 செயற்கைக்கோள்களில், CROPS எனப்படும் விஎஸ்எஸ்சி துணை செயற்கை கோளில், நுண் புவியீர்ப்புச் சூழலில் பிரத்யேக பெட்டகத்தில் (POEM 4) 8 காராமணி விதைகள் வைத்து அனுப்பப்பட்டது. விதையின் வளர்ச்சியை ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், எட்டு காராமணி விதையில், ஒரு காராமணி விதை முளைவிட்டிருப்பதாக, இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
"விண்வெளியில் வாழ்வு துளிர்க்கிறது! PSLV-C60 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட POEM-4 பெட்டகத்தில் வைத்திருந்த காராமணி விதைகள் (cowpea seeds) 4 நாட்களிலே முளைவிட்டுள்ளது. விரைவில் இலைகள் துளிர் விடும் என எதிர்பார்க்கப்படுகிறது" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இஸ்ரோ புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.