தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

10 நிமிடத்தில் வீட்டிலேயே 'செஸ்வான் சட்னி' செய்வோமா? பிரைட் ரைஸ் முதல் இட்லி வரை அட்டகாசமாக இருக்கும்! - SCHEZWAN CHUTNEY RECIPE IN TAMIL

பீட்சா முதல் பிரைடு ரைஸ் வரை பயன்படுத்தப்படும் செஸ்வான் சட்னியை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி சுலபமாக செய்யலாம் என்பதை இங்கு காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat Tamil Nadu)

By ETV Bharat Lifestyle Team

Published : Nov 29, 2024, 5:24 PM IST

பிரைட் ரைஸ், நூடுல்ஸ் தொடங்கி பீட்சா வரை மிக பிரபலமான சாஸ் என்றால் அது செஸ்வான் சாஸ் தான். ஹோட்டலில் சாப்பிட்ட பலரும் இதன் சுவை பிடித்துப்போய், சூப்பர் மார்க்கெட்டில் இருந்து பாக்கெட் பாக்கெட்டுகளாக வாங்கி ஃபிரிட்ஜில் அடுக்கி வைத்திருப்பார்கள். பிரட் தொடங்கி தோசை வரை இந்த செஸ்வான் சட்னியை சைட் டிஸ்ஸாக பயன்படுத்துபவர்கள் ஏராளம். அவர்களில் நீங்களும் ஒருவரா? இனிமேல், கடையில் செஸ்வான் சட்னி வாங்குவதை தவிர்த்து, வீட்டிலேயே செய்து பாருங்கள். ஈஸியாக வீட்டிலேயே செஸ்வான் சட்னி எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • காஷ்மீரி மிளகாய் - 20
  • எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
  • இஞ்சி - 1 துண்டு
  • பூண்டு - 15
  • வெங்காயம் - 2
  • உப்பு - 2 டீஸ்பூன்
  • சர்க்கரை - 1 டீஸ்பூன்
  • வினிகர் - 1 டீஸ்பூன்
  • சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
  • டொமேட்டோ சாஸ் - 3 டீஸ்பூன்

ஷெஸ்வான் சட்னி செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் கழுவி வைத்துள்ள காஷ்மீரி மிளகாய் மற்றும் கொதிக்கும் தண்ணீர் சேர்த்து அரை மணி நேரத்திற்கு ஊற வைத்து விடுங்கள்.
  • அரை மணி நேரத்திற்கு பின், காய்ந்த மிக்ஸி ஜாரில் மிளகாய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
  • பின், அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்ததாக, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். (பொதுவாக, ஷெஸ்வான் சட்னி செய்வதற்கு வெங்காயத்தாள் (Spring Onion) பயன்படுத்துவார்கள்)
  • இவை அனைத்தும் நன்கு வதங்கியதும், நாம் அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன், சர்க்கரை, வினிகர், சோயா சாஸ், டொமேட்டோ சாஸ் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். சட்னியின் நிறம் மாறி நன்கு எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்தால் சுவையான காரசாரமான ஷெஸ்வான் சட்னி தயார்.

குறிப்பு:

  1. ஷெஸ்வான் சட்னி செய்முறையில், உங்களுக்கு பிடித்த அளவு சாஸ் சேர்த்துக்கொள்ளலாம்.
  2. அடுப்பை அணைத்து சட்னி நன்கு ஆறியதும் காற்று புகாத டப்பாவில் வைப்பதால் நீண்ட நாட்களுக்கு சட்னியை பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க:

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details