சென்னை: இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு Apaar ID வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இந்தியாவில் இளநிலை மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு, அந்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுகிறது. நீட் தேர்வில் பல்வேறு குளறுப்படிகள் நடைபெற்றதாக கடந்தாண்டு புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து பாதுகாப்புகளை அதிகரிப்பது குறித்து குழு அமைக்கப்பட்டு , அதன் அறிக்கையையும் தேசிய தேர்வு முகமை பெற்றது.
இந்த நிலையில் 2025ம் ஆண்டிற்கான நீட் தேர்வினை நடத்துவது குறித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அதில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடா, பெங்காலி, குஜராத்தி உள்ளிட்ட 13 மாநில மாெழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது. மேலும் பிஎஸ்சி நர்சிங் படிப்பில் ராணுவ மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்கு நீட் தேர்வு சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் நீட் தேர்விற்கான பாடத்திட்டமும் https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் https://cdnbbsr.s3waas.gov.in/s37bc1ec1d9c3426357e69acd5bf320061/uploads/2024/12/2024123021.pdf என்ற இணையதள இணைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஆதார் அடிப்படையில் இந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், Appar (Automated Permanent Academic Registry-தானியங்கி நிரந்தர கல்வி பதிவு) என்ற கூடுதல் பாதுகாப்பு எண்ணும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒதுக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: கேரளா ஷாரோன் ராஜ் கொலை வழக்கு; காதலி கிரீஷ்மா குற்றவாளி என தீர்ப்பு!
மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வது முதல், கலந்தாய்வுக்கு செல்வது வரை அனைத்து நடவடிக்கைகளிலும் ஆதார் எண்களோடு இந்த அப்பார் ஐடி எண்களும் ஒப்பீடு செய்யப்பட்டு சரிபார்க்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீட் தேர்வு முறையில் முறைகேட்டை தடுக்க கணினி வழி தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசு அமைத்த குழு அறிக்கையில் தெரிவித்திருந்தது. எனினும், இந்த ஆண்டும் ஓஎம்ஆர் தேர்வு தாள் முறையிலேயே நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
கடந்தாண்டு நீட் தேர்வில் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கேள்வித்தாள்கள் முன்கூட்டியே கசிந்து மிகப்பெரிய முறைகேடுகள் நடந்தது வெளிச்சத்திற்கு வந்தன. இதனைக் கருத்தில் கொண்டு முறைகேடுகள் நடக்காத வகையிலும், கலந்தாய்வின்போது போலியான மாணவர்கள் தேர்வு எழுதுவதை தடுக்கும் வகையிலும்.Appar போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை தேசிய தேர்வு முகமை இந்த முறை அமல்படுத்தி உள்ளது. மத்திய உயர்கல்வித்துறை அறிவுறுத்தலின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.