சென்னை: சென்னை, யானைகவுனி பகுதியை சேர்ந்தவர் சூர்யா (25). இவர் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல ஜிம் ஒன்றில் கடந்த 6 மாதங்களாக பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். அப்போது ஓட்டேரியை சேர்ந்த திருமணமான 32 வயதுடைய பெண் ஒருவர் இந்த ஜிம்மில் உடற்பயிற்சிக்காக சேர்ந்துள்ளார்.
இவரது கணவர் வெளி மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஜிம்மிற்கு வந்த பெண்ணுக்கு பயிற்சியாளர் சூர்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஜிம் நிர்வாகத்திற்கு சூர்யாவின் நடவடிக்கைகள் தெரிய வந்ததை அடுத்து அவரை கடந்த டிசம்பர் மாதம் பணியில் இருந்து நீக்கியது. அந்த பெண்ணும் சூர்யா உடனான நட்பை துண்டித்ததுடன் அவருடன் பேசுவதை நிறுத்தி கொண்டதாக கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த சூர்யா அடிக்கடி அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்று அவரிடம் தன்னுடன் மீண்டும் பழகுமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. ஆனால், அந்த பெண் அவரிடம் பேச மறுத்துள்ளார்.
இதையும் படிங்க: அண்ணன் கொலைக்கு பழிதீர்க்க தலைமறைவு வாழ்க்கை; வியாசர்பாடி பாம் சரவணன் பிடிபட்டது எப்படி?
மேலும், ஆத்திரமடைந்த சூர்யா கடந்த 13 ஆம் தேதி ஜிம்முக்கு சென்று அந்த பெண்ணை கீழே அழைத்து வந்து, மீண்டும் தன்னிடம் பழக வேண்டும் இல்லையெனில், இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை, சமூக வலைத்தளங்களிலும், உனது குடும்ப உறுப்பினர்களுக்கும் அனுப்பி விடுவேன் என மிரட்டியதுடன் அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஜிம் பயிற்சியாளர் சூர்யா மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நேற்று அவரை கீழ்ப்பாக்கம் போலீசார் கைது செய்தனர். பின்னர் சூர்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.