தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

இந்த டிப்ஸ் தெரிஞ்சா மதுரை பேமஸ் 'சால்னா' செஞ்சிடலாம்..ஹோட்டல் ஸ்டைல் ரெசிபி இதோ! - PAROTTA SALNA RECIPE IN TAMIL

அச்சு அசல் மதுரை ஹோட்டல் ஸ்டைலில் இருக்கும் 'மதுரை சால்னா' எப்படி செய்வது என பார்ப்போமா? சால்னாவிற்கு முக்கியமாக இருக்கும் மசாலாவை இப்படி அரைத்தால் போதும், நாக்கில் சுவை நடனமாடுவது நிச்சயம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)

By ETV Bharat Lifestyle Team

Published : Nov 29, 2024, 11:02 AM IST

மதுரைக்கு மல்லி பேமஸ் என்றாலும், பலருக்கும் மதுரை என்றால் நினைவுக்கு வருவது 'புரோட்டாவும் சால்னாவும்' தான். மதுரையை தவிர்த்து எந்த ஊருக்கு சென்று, புரோட்டா சாப்பிட்டாலும், 'ச்சா..மதுரை சால்னா மாறி வருமா' என்ற பேச்சு இன்றளவும் வந்து கொண்டே தான் இருக்கிறது. இப்படி, அனைவரின் மனதையும் வயிற்றையும் கவர்ந்த மதுரை எம்டி சால்னாவை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என பார்க்கலாம் வாங்க.. இதை, தோசை, சப்பாத்தி, இட்லிக்கு வைத்து சாப்பிட்டாலும் அட்டகாசமாக தான் இருக்கும். ஒரு முறை ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லுங்க..

மதுரை சால்னா செய்வது எப்படி:

  • முதலில், ஒரு மிக்ஸி ஜாரில் 1 சின்ன துண்டு இஞ்சி, 1 கைப்பிடி பூண்டு, 10 சின்ன வெங்காயம், 3 பெரிய சில் தேங்காய், 1 பச்சை மிளகாய், 1 டீஸ்பூன் சோம்பு, 1 டீஸ்பூன் சீரகம், 3 ஏலக்காய், 1 டீஸ்பூன் மிளகு, 2 பட்டை, 2 டீஸ்பூன் கசகசா, 6 முந்திரி, 4 கிராம்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து தனியாக வைக்கவும். (இந்த மசாலா தான் சால்னாவிற்கான அந்த தனிச்சுவையை தரும்) முந்திரி வேண்டாம் என நினைப்பவர்கள் 2 டீஸ்பூன் பொட்டுக்கடலை சேர்க்கலாம்.
  • இப்போது, அடுப்பில் ஒரு குக்கரை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், 1 பிரிஞ்சி இலை, 1 பச்சை மிளகாய், 1 கருப்பு ஏலக்காய், 1 அண்ணாசி பூ, 2 பட்டை, 3 கிராம்பு சேர்க்கவும். அதன் பின்னர், 1 கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், நறுக்கி வைத்து 2 பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இப்போது சால்னாவுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.
  • வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பின்னர், நறுக்கி வைத்த 2 பழுத்த தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி மசிந்து வந்ததும், 1 கைப்பிடி புதினா இலைகளை சேர்த்து வதக்கவும்.
  • இப்போது, 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அடுப்பை குறைந்த தீயில், பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • மசாலா அனைத்து நன்கு வதங்கியதும், நாம் அரைத்து வைத்த விழுதை சேர்த்து கலந்து விடவும். மசாலாவின் பச்சை வாசனை நீங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். பின்னர், குக்கரை மூடி ஹை பிளேமில் 3 முதல் 4 விசில் வைத்து எடுத்தால் மதுரை ஸ்டைல் மணமணக்கும் பரோட்டா சால்னா தயார்.
  • சால்னா தண்ணீர் பதத்திற்கு வேண்டும் என்றால், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடுங்கள் போதும்.

ABOUT THE AUTHOR

...view details