குழந்தைகள் தொடர்ந்து புத்தகம் படிப்பதால் அவர்களின் எண்ண ஓட்டம், புத்திக் கூர்மை, நினைவாற்றல் மற்றும் பண்புகள் என அனைத்து நல்ல பழக்கங்களும் தானே வளரும். ஆனால், இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் இல்லாமலே போய் விட்டது. அதில் உங்கள் குழந்தையும் ஒருவரா? உங்கள் குழந்தையின் வாசிப்பு திறனை அதிகரிக்க நினைக்கிறீர்களா? அப்படியென்றால், குழந்தையின் வாசிப்புத் திறனை வளர்க்கும் எளிமையான வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது, முயற்சி செய்து பாருங்கள்.
அன்றாட பழக்கமாக மாற்றுங்கள்:உங்கள் குழந்தை பிறந்த நாளிலிருந்தே, நீங்கள் அவர்களை வாசகராக வளர்க்க முடியும். தினசரி உங்கள் குழந்தை தூங்கப் போகும் முன் ஒரு சிறுவர் கதை புத்தகத்தை படித்து காட்டுங்கள். அல்லது, நீங்கள் படித்த கதைகளை பகிருங்கள். குழந்தையின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும், அவர்கள் கேள்வி எழுப்பும் வகையிலும் கதை சொல்ல முயற்சி செய்யுங்கள். இப்படி செய்யும் போது, குழந்தைகளுக்கு இயல்பாகவே வாசிப்பு மீது ஆர்வம் வரத் தொடங்கும்.
குழந்தைகள் முன் புத்தகம் வாசியுங்கள்: குழந்தைகளை என்ன தான் சொல்லி வளர்த்தாலும், பெற்றோர்கள் செய்யும் செயலை பார்த்து தான் அவர்கள் வளர்கின்றனர். அதை தான் மீண்டும் செய்கின்றனர். அந்த வகையில், நீங்கள் புத்தகம், நாளிதழ், நாவல்கள் படிப்பதாக இருந்தால் குழந்தைகளின் கண் முன் வாசியுங்கள். அதனை குழந்தைகள் பார்க்கட்டும். தினசரி பெற்றோர்களின் வாசிப்பு பழக்கத்தை பார்க்கும் குழந்தைகள், தானாகவே புத்தகத்தை புரட்ட தொடங்குவார்கள்.
அடிக்கடி லைப்ரரி விசிட்:என்ன தான் அலமாரியில் வகை வகையான ஆடைகள் இருந்தாலும், புது துணி எடுக்க கடைக்கு சென்றால் அனைவருக்கும் எங்கிருந்தோ ஆர்வம் வந்துவிடுகிறது. அதே போல தான், குழந்தைகளுக்கு அனைத்து புத்தகங்களை ஒரே இடத்தில் பார்க்கும் போது ஆச்சரியாமாகவும், ஆசையாகவும் இருக்கும். வீட்டிற்கு அருகே உள்ள நூலகத்திற்கு உங்கள் குழந்தையை வாரத்திற்கு ஒரு முறை கூடிச் செல்லும் போது, நூலகத்தில் அமர்ந்து படிப்பவர்களை பார்த்தும், புத்தகங்களை பார்த்தும் வாசிப்பு பழக்கம் வரத் தொடங்கும்.
இதையும் படிங்க:புத்தாண்டில் புதிய மாற்றங்கள்..இந்த 5 புது பழக்கம் உங்கள் வாழ்க்கையை நிச்சயம் மாற்றும்!