மதிய உணவுக்கு பின்னர் சிறுதுயில் கொள்வது பலரது அன்றாட வழக்கமாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மதிய நேரத்தில் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தால் புத்துணர்ச்சியாக உணர்வார்கள். ஆனால், அலுவலகத்தில் பணி புரிபவர்களுக்கு இந்த மதிய தூக்கம் பிரச்சனையை ஏற்படுத்தும். அப்படி, அலுவலகத்தில் மதிய நேர தூக்க கலக்கத்தை எப்படி துரத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..
தண்ணீர் குடிங்கள்:மதியம் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நமது உடலை நீரேற்றமாக வைத்திருந்து சோம்பலைக் குறைக்கும். அதிக நேரம் தண்ணீர் குடிக்காமல் பணி புரிவது சோர்வை உண்டாக்கி தூக்கத்தை ஏற்படுத்தும்.
டீ, காபி: ஒரு கப் காபி அல்லது டீ பருகுவது மதிய வேளையில் ஏற்படுத்தும் தூக்கத்தை துரத்த உதவும். இருப்பினும், உடனடி உற்சாக உணர்வை ஏற்படுத்தும் இந்த பானங்களை அளவோடு அருந்துவதே நல்லது. அதிகப்படியாக காபீன் (Caffeine), உடலில் நீரிழப்பை ஏற்படுத்தி வழக்கமான இரவு தூக்கத்தை பாதிப்பதே இதற்கு காரணம்.
காற்றாட நடப்பது:அலுவலத்தில் மதிய நேர தூக்கம் அதிகமாக தொந்தரவு படுத்தினால் உடனே காற்றாட வெளியே சிறிது தூரம் நடந்து சென்று வந்து பணிபுரியுங்கள். ஃப்ரஷ்ஷான காற்றும், லேசான சூரிய ஒளி உடலுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி தூக்க கலகத்தை போக்கும்.
லேசான, சத்தான உணவு: நீண்ட நேரம் அமர்ந்து பணி புரிபவர்கள் மதிய உணவின் போது அதிகமான எண்ணெய் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதை தடுக்கவும். இவை, மந்தமான உணர்வை ஏற்படுத்தி கூடவே தூக்கத்தை அழைத்து வருகிறது. ஆகையால், அலுவலகத்தில் இருக்கும் போது புரதம், நார்ச்சத்து நிறைந்த மிதமான அளவு மதிய உணவை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக, சாதத்தை குறைத்து சாலட், பச்சைக் காய்கறிகள், பழங்களை முடிந்த வரையில் மதிய உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது உடலுக்கு ஆற்றலை கொடுத்து தூக்கத்தை குறைக்கிறது.
சிறிய இடைவெளி:தொடர்ச்சியான வேலை ஒருவரை சோர்வடையச் செய்வது இயல்பும் இயற்கையானதும் தான். அதனால், அலுவலக நேரத்தில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 5 முதல் 10 நிமிட இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த சிறிய இடைவெளி நம் மனதையும், மூளையையும் புத்துணர்ச்சியடையச் செய்து தூக்கத்தை விரட்ட உதவும்.
சிறிது நேர ஓய்வு:மதிய வேளையில் தூக்கத்தை தடுப்பது கடினமாகத் தோன்றினாலும், குறிப்பாக அலுவலகத்தில் கடினமாக இருந்தால் 10 முதல் 15 நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுங்கள். இதன் மூலம் புத்துணர்ச்சி பெற்று உற்சாகமாக செயல்படலாம். குறிப்பாக, மதிய உணவுக்குப் பின்னர், நமக்கு அலுப்பு, சலிப்பூட்டுவதாகத் தோன்றும் வேலைகளைத் கொஞ்ச நேரம் ஒத்திவைத்து விருப்பமான வேலைகளை செய்யலாம். இதனால் மதிய நேர உறக்கம் நம்மை ஆக்கிரமிப்பதை தவிர்க்கலாம்.
ஆரோக்கியமான தூக்கத்திற்கான குறிப்புகள்
- இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் புத்தகம் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
- படுக்கைக்குச் செல்வதற்கு முன் மஞ்சள் தூள் கலந்த பால் குடிக்கவும். இது நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
- தினசரி 6 முதல் 8 மணி நேரம் தூங்குவதை உறுதிப்படுத்தவும். இது சோர்வு மற்றும் பகலில் ஏற்படும் தூக்கத்தை தடுத்து சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.