ஆசை ஆசையாக மட்டன் எடுத்து சமைத்த பின், கறி சரியாக வேகவில்லை என்றாலோ அல்லது அதிகம் வெந்து விட்டாலோ அவ்வளவுதான், குழம்பின் சுவையே கெட்டு விடும். அதன் கூடவே மனமும் கவலையடைந்து விடுகிறது. வீட்டில் எத்தனை முறை மட்டன் செய்திருந்தாலும், சமைத்தவுடன் பஞ்சு போல் இருப்பது என்பது அறிதே. இந்த மாதிரியான பிரச்சனைகளை இனி வராமல் இருக்க, இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை பின்பற்றுங்கள்..
கல் உப்பு: ஆட்டிறைச்சியை நன்கு கழுவி, தண்ணீர் இல்லாதவாறு பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இப்போது மட்டனில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து அனைத்து இடங்களிலும் படும் வகையில் கலந்து விட்டு,ஒரு மணி நேர ஊற வைக்கவும். பின்னர், சமைத்து பாருங்கள் மட்டன் பஞ்சு போல் வெந்திருக்கும்.
டீ: மட்டனை சமைப்பதற்கு முன், டீ டிக்கசனை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இப்போது, நாம் கழுவி எடுத்துவைத்துள்ள மட்டனில் டிக்கசனை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். அதன் பிறகு, அந்த மட்டனில் குழம்பு, சுக்கா என என்ன செய்தாலும் சீக்கிரமாக வெந்துவிடும்.
வினிகர் அல்லது எலுமிச்சை சாறு: ஆட்டிறைச்சியை விரைவாக சமைக்க வினிகர் அல்லது எலுமிச்சை சாறும் பயன்படுத்தலாம். இவை அமில பண்புகளைக் கொண்டிருப்பதால், மட்டனை வேகமாக சமைக்க உதவுகின்றன மற்றும் மட்டன் குழம்பிற்கும் கூடுதல் சுவையை சேர்க்கின்றன.
தக்காளி:மட்டன் சீக்கிரமாக வேக தக்காளியும் பயன்படுகிறது. சமைக்கும் போது மட்டனை சேர்ப்பதற்கு முன் தக்காளி விழுது அல்லது தக்காளி சாஸ் சேர்த்தால், மட்டன் நன்றாக வேகும். சிலர் மட்டன் இறைச்சியை சேர்த்ததற்கு பின்னர் இறுதியாக தக்காளியை சேர்ப்பார்கள். ஆனால் மட்டனை சேர்ப்பதற்கு முன் தக்காளியை சேர்த்தால் மட்டன் வேகமாக வெந்துவிடும்.
இதையும் படிங்க:இனி சிக்கன் எடுத்தால் ஹைதராபாத் ஸ்டைல் 'க்ரீன் சிக்கன் கறி' செய்து பாருங்கள்..செம ருசி!